மனித உரிமைகளும் அரசியலும்

கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கன் (Professor, Head – Dept. of Political Science, University of Jaffna)

அறிமுகம்
மனித உரிமை பிரகடனம் பற்றிய வியாபகப்படுத்தல் அனைத்து உலக நாடுகளிலும் வாழும் மக்களாலும் பேசப்படும் பிரபலமான பிரகடனமாகும். மனித உரிமை என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்திய அமெரிக்கர்களும் அவர்களது ஆட்சியாளர்களும் நாடுகளையும் அதன் அதிகார வர்க்கத்தினையும் கட்டுப்படுத்த பயன்படுத்தும் உயர்ந்த பட்ச நெறிமுறையாக மனித உரிமை பிரகடனத்தை கருதுகின்றனர். ஒருபக்கம் மனித உரிமை என்ற பொதுமைப்பட்ட நியாயவாக்கமுடைய அம்சமும் மறுபக்கத்தில் அரசியல் அதிகாரத்திற்கான அபிலாசை என்ற அம்சமும் எதிர்முரணியத்தை கொண்டியங்குகிறது உலக அரசியல் போக்கிற்குள் காணப்படுகின்றன. இக்கட்டுரையும் மனித உரிமைப் பிரகடனத்துக்கு பின்னால் மறைந்திருக்கும் அரசியல் அபிலாசையையும் அது ஏற்படுத்தி வரும் அதிகார ஆதிக்கத்தையும் பரிசீலிக்க முயல்கின்றது. இவ் ஆய்வுக் கட்டுரை இரண்டாம் நிலைத் தரவுகளையும் கொண்ட விபரவியல் ஆய்வாக அமைகின்றது.

மனித உரிமை பிரகடனம் கூறும் போலிகள்

உறுப்புரை (1) ஒன்று கூறும் மனித உரிமை பிரகடனம் உலகிலுள்ள எல்லாப் பிறவியினரையும் சமமானவராகவும் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ள வேண்டும் எனக் கோருகிறது. அவ்வகை கோரிக்கை நியாயமானதாக காணப்பட்டாலும் நடைமுறை நியாயமானதாக இல்லையே. அமெரிக்கர்களும், ஆபிரிக்கர்களும் சமமானவராகவும், சகோதரராகவும் வாழ முடியுமா? இரண்டாம் உலக யுத்த முடிவில் அமெரிக்க முதல் பெண்மணியினால் வரையப்பட்ட மனித உரிமைப் பிரகடனம் வெளியான பிற்பாடு நிகழ்ந்த அனைத்து மனித உரிமை மீறலிலும் ஆதிக்கத்திற்குரிய பங்கு அதிகமானது. ஆசிய நாட்டு மக்களையும், ஆபிரிக்க நாட்டு மக்களையும் ஆதிக்க சக்திகளின் ஆட்சியாளரும் மக்களும் எப்படி கருதுகின்றனர் என்பது கடந்த கால வரலாறு. போர்களையும் போர்களை நடத்தும் அரசியல் தந்திரங்களையும் நோக்கும் போது ஆதிக்க சக்திகளின் பொய்யான வாக்குறுதியாக நிமிர்கிறது அனைத்துலக மனித உரிமை பிரகடனம்.

உறுப்புரை (2) இரண்டு இன, நிற, பால், மொழி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்குதல். மேலும் இறைமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாயினும் நாடு ஒன்று எந்த விதத்திலும் வேறுபாடு காட்டப்படுதல் ஆகாது. மிக அற்புதமான கற்பனைச்சரத்து. உலகில் எந்த மூலையிலாவது வெள்ளையன், கறுப்பன் என்ற நிற பேதத்தையோ ஆங்கிலேயன், பிரஞ்சுக்காரன் என்ற மொழி பேதத்தையோ கிறிஸ்தவன், இஸ்லாமியன் என்ற மதபேதத்தை தவிர்த்து வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்குதல் முடியுமான அம்சமல்ல. வேறுபாடும், பேதமும் மனித சமுதாயத்திடம் ஊறிப் போன ஓர் அம்சம். இன, நிற, பால், மொழி, மதம் மட்டுமல்ல சாதி, வர்க்க, கட்டமைப்புகளும் கையாளப்படுகின்றது. போலியான சுலோகங்களை முன்னிறுத்தி விட்டு அதிகாரப் பரப்புகையை கையாள்வதற்கு ஒரு பிரிவினர் மேற்கொள்ளும் அணுகுமுறைகளே மனித உரிமை பி;ரகடனம். இதனை சரிவரப் பின்பற்ற எந்தச் சமூகம் தயாராகின்றதோ அதுவே முழுமையான மனித சமூகத்திற்கான முன்னோடி சமூகமாக அமையும் என்ற வாதத்தை சேர்த்துக்கொள்ள அவ்வகைப் பிரிவினர் முயன்று வருகின்றனர்.

உறுப்புரை (4) நான்கு அடிமை நிலை முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும் எனக் கூறுகிறது. மனிதனை அடிமை வியாபாரத்திற்கு உட்படுத்திய வரலாற்றைத்தான் கண்டார்களே அன்றி மனித சமூகம்இ வியாபாரம் பொருளுக்கு அடிமையான வரலாற்றை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் வியாபாரப் பொருளுக்கு அடிமையாக மாறியுள்ள மனிதகுலம் வளர்ந்த பொருளாதார வளமுடைய நாடுகளின் வியாபாரத் தந்திரத்திற்கு அடிமையாகக் கிடக்கின்றது. கீழ்த்திசை நாடுகளின் மக்கள் நுகர்வையே தொழிலாகக் கொண்டு இயங்கும் இயங்கியல் விதிக்குள் அகப்பட்டுள்ளனர். வறுமை என்ற சுமைக்குள் மக்களின் இயற்கையின் வாழ்க்கை முறையை அறிவின்மை என்ற சொற்களுக்குள் அடக்கிவிட்டு ஆதிக்க நாடுகள் பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் தமக்குரியதாக்கி விடுகின்றன. இவ்வகை அடிமைத்தனம் எப்போது மறையும். டொலரையும் ($)இ யூரோவையும் விஞ்சும் நாணயம் உலகில் இல்லை. ஏனைய நாணயங்கள் தரத்தாலும்இ அளவாலும் பெறுமானத்தாலும் கீழ்நிலையை உணர்வதால் ஏற்பட்டுள்ள அடிமைத்தனம் நிரந்தரமானது.

உறுப்புரை (5) ஐந்தில் சித்திரவதைக்கோ, கொமையான மனிதத் தன்மையற்ற இழிவான நடைமுறைக்கோ, தண்டனைக்கோ எவரும் உட்படலாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக அற்புதமான வரிகள் மனித சமூகத்தின் பரிமாணக்கட்டம் முழுவதும் இச்சரத்திற்கு எதிரான பதிவுகளே அரங்கேறி வருகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதையோ, குற்றவாளிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்படுவதையோ இங்கு குறிப்பிடப்படவில்லை. மாறாக குற்றமே புரியாத எத்தனை கோடி மனிதர்கள் நாளாந்தம் சித்திரைவதைக்கும், இழிவான நடத்தைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். மனித உரிமைவாதிகள் எனத்தம்மைக் காட்டிக்கொள்பவர்கள் எத்தனை பேரை மனிதத்தன்மையற்ற விதத்தில் நடத்துகிறார்கள். சித்திரைவதையும், இழிவான நடத்தையும் வன்முறைக்கு மட்டுமுரியதல்ல. உணர்வாலும் உரையாலும், செயலாலும் வெளிப்படுத்தும் போது அது சித்திரைவதையாகவே கருதப்படுகிறது. நிக்கலோ மாக்கியவல்லி குறிப்பிடுவது போல் எல்லா மனிதனும் அதிகார வெறிக்குரியவனாகவே காணப்படுகின்றான். பிற மனிதர்களை அடக்கி ஆளுவதே ஒவ்வொரு பிரஜையின் பண்பாகுமென அவர் குறிப்பிடுவது மிகச் சரியானது. மனித உரிமைப் பிரகடனங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு உலகத்தினை ஆதிக்கவெறி கொண்ட சக்திகள் ஆளுகின்றன. அவர்களின் ஆளுமைக்கும், ஆதிக்கத்திற்கும் சவால் விடும் சக்திகளை கட்டுப்படுத்தும் சாதனமாக மனித உரிமைச் சட்டங்கள் கொள்ளப்படுகின்றன

உறுப்புரை (7) ஏழு எல்லோரும் சட்டத்திற்கு முன்பு சமமானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சட்டத்திலே பாரபட்சம் காட்டப்பட்டுள்ள சரத்துகள். அனேக நாடுகளில் வரையப்பட்டுள்ள. ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் தனியான சட்டங்களை ஒரே அரசியலமைப்பில் வரைந்துள்ள நாடுகளிலும் ஆட்சியிலும் சட்டத்திற்கு, முன்பு சமமானவர்களாக எப்படி காண முடியும். அது மட்டுமல்ல அவ்வாறு மீறப்படும் பட்சத்தில் நியாயாதிக்க சபைகளை நாடமுடியுமென உறுப்புரை (8) எட்டு குறிப்பிடுகின்றது. சட்டத்திலே சமமான உரிமை வழங்கப்படாத சூழலில் நியாய சபைகள் எப்படி நீதியானதாக நிறுவப்பட்டிருக்கும். அவ்வகை நியாய சபைகள் ஆளும் வர்க்கத்தின் நலனுக்குரியதாகவல்லவா நிறுவப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள அனேக அரசியலமைப்பு சட்டங்களிலும் ஆட்சியாளரையும், அவர்களை பாதுகாக்கும் சரத்துக்களையும் தவிர வேறு எதனையும் அதிகமாக காணமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. சட்டங்களை வரைந்து விட்டு சர்வாதிகார ஆட்சி நிகழ்கிறது.

உறுப்புரை (9) ஒன்பதில் ஒரு தலைப்பட்சமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், நாடுகடத்தில் என்பவற்றுக்கு எவரும் உட்படுத்தலாகாது. இது உலகில் எந்த நாட்டிலும் காண முடியாத ஒரு கற்பனை வடிவம், ஆட்சிக்கு எதிரானவர்கள் கைது செய்யப்படுத்தப்படல் சித்திரைவதைப்படுத்தப்படல், நாடு கடத்தப்படுதல் சாதாரணமான நிகழ்வாகவே உள்ளது. நாடுகளுக்கு இடையிலான உறவைத் தீர்மானிப்பதில் பிரஜைகளின் கைதுகளை பயன்படுத்துமளவுக்கு அரசியல் அதிகாரம் பலவீனமாகி விட்டது. அல்லது அரசியல் அதிகாரத்திற்கான கெடுபிடி அதிகரித்து விட்டதெனக் குறிப்பிடலாம். பிரஜைகளுக்கான அரசு என்ற நிலை மாற்றப்பட்டு அரசுக்காகவே அனைத்துமென்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதே வலிமையுடன் உறுப்புரை (12) பன்னிரண்டு குறிப்பிடும் விடயம் எவரது தனிப்பட்ட நலனுக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டமி;ட்டு அவமதித்தல், நன்மதிப்பை இழக்கச் செய்தல், அந்தரங்கமான அனைத்தையும் காட்சிப்படுத்தல் என்ற எல்லை மீறல்கள் அரசாங்க பாதுகாப்புகளாலும், தனிப்பட்ட குழுக்களாலும், பிரஜைகளாலும் நிகழ்த்தப்படுகின்ற அம்சமாக உள்ளது. அனேக நாடுகளில் மேற்குறிப்பிட்ட உறுப்புரைகள் எவற்றுக்குமான சரத்துகளோ, விதிகளோ இல்லாத நிலை காணப்படுகின்றது போது பிரஜைகள் எவ்வாறு சட்டப் பாதுகாப்பினை பெற முடியும்.

உறுப்புரை (11) பதினொன்று கூறும் பகிரங்கப்படுத்தல், நீதிமன்றங்களின் பிரதான கடமையாகும். குற்றவாளியென அரசாங்கங்களும், அதற்கு சார்பான ஊடகங்களும் எடுக்கும் தீர்மானங்களுக்குள் ஆயிரக் கணக்கான பிரஜைகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பகிரங்க விளக்கமோ விவாதமோ இன்றி தண்டனை அனுபவித்து வருகின்றனர். அரசாங்கங்களுக்கு அப்பால் நிகழும் நிர்வாக சீர்கேட்டினாலும் தாமதத்தினாலும் தனிப்பட்ட நலனுக்காகவும் எத்தனையோ மனிதர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற உரிமை நிராகரிப்பு வாதம் நிலவி வருகிறது. நிராகரிப்பு வாதம் அரசியல் அதிகாரத்திற்கான வாதமாகவே விளங்குகின்றது. அரசியல் அதிகாரத்தின் கைகளில் அகப்பட்டுள்ள மனித உரிமைச் சட்டங்கள் ஏமாற்றுச் சட்டங்களாக தொழிற்படுகின்றன.

இவ்வாறு உறுப்புரைகள் பதின்மூன்று (13) பதினான்கு(14) சரத்துக்கள் சுதந்திரமான பிரயாணம் செய்வதற்கும், வதிவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டென குறிப்பிடுகின்றது. அவ்வாறே புகலிடம் தேடவும் பாதுகாக்கவும் எல்லா பிரஜைக்கும் உரிமை உண்டெனக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இவ்வகை சரத்துக்களை கட்டுப்படுத்தும் விதிகள் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கு உரியதாக இருக்கின்றன. புகலிடம் தேடும் போது ஐ.நா.சபை விதிக்கும் நிபந்தனைகளை போன்று ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியலமைப்புக்கு உட்பட்டதான விதிகள் காணப்படுகிறது. இவ்வாறு மனித உரிமைக்கான சரத்துக்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் அரசுகளாலும், அரசாங்கங்களாலும் ஆட்சியாளர்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்ற தன்மையை காண முடிகின்றது. உறுப்புரை (30) முப்பதில் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியதையும், அழிக்கவோ நிராகரிக்கவோ முடியாதென்பதையும் வலியுறுத்தியுள்ளது.

அரசியல் அதிகாரமும் மனித உரிமையும்

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தினை இயங்கு திறனுடையதாக்கும் வல்லமை ஐ.நா.சபைக்குரியது. ஐ.நா.சபையை இயக்கும் திறன் உலகிலுள்ள வலுவான நாடுகளுக்கும் அவற்றின் அரசாங்கங்களுக்கும் உரியது. அவ்வகை நாடுகள் குறிப்பாக பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளுக்கே உரித்துடையதாக காணப்படுகின்றன. அவற்றிலும் கீழ்த்திசை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சீனா, ரஸ்யா என்பன இயல்பான மேல்திசைநாடுகளாகவே காணப்படுகின்றன. மேலும் அவையின் நலன்களைப் பாதிக்கும் நிலையிலான மிக நெருக்கடியான கட்டங்களில் வீட்டோவை பயன்படுத்தாது வெளியேறுவதனால் அவற்றின் அணுகுமுறையும் நிரந்தர உறுப்புரிமையும் வலுவற்றுப் போகின்றன. எனவே ஐ.நா.இயக்கும் திறன் மேற்குலக நாடுகளுக்கே உரியதாக உள்ளது. அவற்றின் அரசியல் அட்டவணைக்கு ஏற்பவே உரிமைப் பிரகடனம் கையாளப்படுகி;ன்றது. மேற்கின் நலனுக்கு உட்பட்ட ஏனைய உலக நாடுகள் இயங்குகின்றன. அவ்வகை உரிமைப் பிரகடனம் நிபந்தனையாகவே காணப்படுகின்றது. அதனை மீறும் சக்திகள் மேற்குலக நலனுக்கு விரோதமான சக்திகளாகவே அடையாளப்படுத்துதல் வெளிப்படையாக இல்லாத போதும் அதுவே யதார்த்தமானது. அவ்வகை ஆட்சிகளும், அதிகார சக்திகளும் மக்களின் இன்னோர் புரட்சியூடாக தூக்கியெறியப்படும். அதனால் உருவாகும் புதிய அதிகாரம் மக்கள் சார்பானதல்ல. மேற்குச் சார்பானதாகவே அமையும். அவ்வாறு அமைய வேண்டும். மக்கள் ஒரு ஏகாதிபத்தியத்தை விரட்டி விட்டு இன்னோர் ஏகாதிபத்தியத்தை அமர்த்துகின்ற நியமமே நிலவுகிறது. ஏனெனில் ஆளும் அதிகாரவர்க்கம் ஏகாதிபத்தியமாகவே மாறுகின்றது. காரணம் ஏகாதிபத்தியம் வியாபகமானது. உலகம் முழுவதும் பீடித்துள்ள உயர்ந்த பட்ச அம்சம் ஏகாதிபத்தியமே ஆகும். அதிலும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும், கையாள்வதும் ஏகாதிபத்திய மனோநிலைக்குரியவரால் முடியுமென்ற அனுபவத்தை சட்டரீதியாக நிறுவப்பட்டு விட்டது.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் மிகப் போலியான பிரகடனம். அதனை முன்னிறுத்திய மேற்குலகம் கீழைத்தேச புத்தி ஜீவிகளையும் அவர்களது ஆய்வுப் புலத்தையும் குடைச்சல் போட்டு வீணடிக்கவும், அரசுகளிளும், அரசியல் தலைவர்களது போக்கினை தமக்கேற்ற வகையில் சரிப்படுத்தவும் பயன்படுகின்ற சாதனமாகும். மனித உரிமை மீறல் நிகழாமல் தடுக்கவல்ல அதிகாரமும் செல்வாக்கும் உரிய சபைகளும் வளர்ந்த மேற்கு நாடுகளும் மீறலை பார்த்துக்கொண்டும் பதிவு செய்து விட்டும் விசாரணைக்கும் தண்டனைக்கும் உள்ளாக்க நேர விரயத்தை செய்கின்றன. மீறல் நிகழாது தடுப்பதை விடுத்து மீறல் நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது மட்டுமன்றி அவ்வகை அரசுகளை மிரட்டுவதற்கு மீறலை ஆயுதமாக பயன்படுத்துகின்றன. அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தில் முன் வைக்கப்பட்ட பாராபட்சமில்லாத மனித உரிமை மீறல்கள் நிகழும் போது அனாமதேயமாகிவிடுகின்றன. சேர்பிய முஸ்லீம்கள் ஐ.நா.சபையின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் முகாமுக்குள் தஞ்சமடைந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என வகைப்படுத்தி கொல்லப்பட்டனர். குழந்தைகள், சிறுவர்கள் அழிக்கப்பட்டனர். பெண்கள், சிறுமிகள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இவற்றுக்கு கட்டளை பிறப்பித்த இராணுவத் தளபதி பல வருடங்களுக்கு பின்பு இந்த ஆண்டு நடுப் பகுதியில் கைது செய்யப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையே மனித உரிமைப் பிரகடனங்களை பாதுகாக்கும் அவைகளும் மன்றங்களும் பின்பற்றி வருகின்றன.

முடிவுரை
அரசியல் அபிலாசையாகும் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தினை அரசியல் சக்திகளிடமிருந்து மீட்டெடுத்தல் வேண்டும். இல்லாதுவிடின் மனித உரிமைப் பிரகடனத்தால் சாதாரண மனித சமூகத்திற்கு எந்தவிதமான நன்மையோ இலாபமோ கிடைக்க வாய்;பில்லை. வளர்ந்த ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் அரசியல் அதிகாரத்தினை கையாள்வதற்கு மனித உரிமைப் பிரகடனத்தினை கையாள முடியுமே அன்றி அதனால் மாற்றம் நிகழப் போவதில்லை. போலியான கற்பனாவாதத்தால் உலகம் ஆளப்படும் வரலாறு தொடர்ந்த வண்ணமுள்ளது. சோக்கிரட்டீஸின் கிரேக்ககால வரலாறு முதல் இன்று வரை அனைத்து அரசியல் சுலோகங்களும் போலியாகி புனைகதையாக முடிந்துள்ளன. இதில் ஒன்றாகவே மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது. இதன் துயரம் உலகத்தின் யதார்த்தமாகி விட்டது. மீறலை அரசியல் இலாபமாக்குவதும், அவற்றுக்கு தண்டனை வழங்குவதும், போலி முகங்களை காட்டும் அனுபவமாகி விடுகிறது. மனித உரிமைக்குள் நிலவும் போலி அகற்றப்பட வேண்டும்.
உதவிய நூல்கள் அல்லது கட்டுரைகள்.

  1. மனித உரிமை ஆணைக்குழு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், கொழும்பு.
  2. Hans Gsangur, Myriam fernando; Poverty monitoring in Asia CEPA, Colombo – 2004.
  3. Brownlie lan, Basic Documents on Human Rights, Third Edition claren don press, London, 1994.
  4. Jayampathy Wickramaratna, Fundamental Rights in Sri Lanka, Navrang Book sellers & Publishers, Inderpuri, New Delhi. 1996.
  5. Dworkin, R. Taking Rights Seriously, Cambridge, Mass : Harvard University Press, 1989.