ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மீனின் அவசியம்

செல்வி. மேனகா ஜெயகுமார் BSc Food Science and Nutrition, MSc Food Science)
Lecturer (Probationary), Home Economics, University of Jaffna

மனித உணவில் மீன் ஆனது புரதச் சத்தை வழங்கும் பிரதான மூலமாகத் திகழ்கிறது. மேலும் மீனில் அத்தியாவசியக் கொழுப்பமிலங்கள், இரும்பு, கல்சியம், அயடீன் மற்றும் விற்றமின் D என்பன காணப்படுவதால் வாரம் ஒன்றிற்கு இரண்டு தடவையாவது மீனை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. நெத்தலி போன்ற சிறிய மீன்களை முட்களுடன் சேர்த்து கறியாகவோ, பொரித்தோ உண்ணும் போது அவற்றில் காணப்படும் கல்சியம் உடலுக்குக் கிடைக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்பானது பல்நிரம்பாக் கொழுப்பமிலங்களைக் கொண்டது. இவை குருதிக் குழாய்களில் கொலஸ்திரோல் படிவதைக் குறைத்து இதய நோய்கள் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கின்றன. மேலும் மீன் உள்ளெடுத்தலானது உயர் குருதியமுக்கம், புற்றுநோய் என்பன ஏற்படுவதை குறைக்கின்றது என்பதும் கண்டறியப்பட்டள்ளது. சிறந்த உடல் எடையைப் பேணுவதில் மீன் முக்கிய பங்காற்றுகிறது.

கடலில் பிடிக்கப்படும் மீன்கள் அயடீனைக் கொண்டிருக்கும். அயடீன் ஆனது தைரொயிட் ஓமோன்களின் உற்பத்திக்கு உதவுகிறது. உணவில் மீனை சேர்த்துக் கொள்வோருக்கு அயடீன் குறைபாட்டால் கண்டக்கழலை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் தமது உணவில் மீனைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மீனில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பமிலங்கள் கருவில் உள்ள சிசுவின் மூளை வளர்ச்சிக்கு உதவும். கல்வி கற்கும் சிறுவர்களில் அறிவு வளர்ச்சிக்கு மீன் வழங்குவது அவசியமாகும். அவர்களுக்கு உண்ணும் ஆர்வத்தை தூண்டுவதற்காக மீனை பொரித்து உணவில் சேர்க்கலாம். முதியோரின் உணவிலும் மீன் முக்கிய பங்கை ஆற்றுகிறது. மீனில் காணப்படும் புரதம் இலகுவில் சமிபாடடையக்கூடியது.

மீனை மெல்லவியல், வறுவல், பொரியல், வாட்டுதல், சுடுதல் போன்ற முறைகளில் சமையல் செய்ய முடியும். மீனைச் சமையல் செய்யும் போது அதன் சுவை அதிகரிக்கும்.

மீனானது அதிக நீர் உள்ளடக்கத்தையும், போசணைக் கூறுகளையும் கொண்டிருப்பதால் நுண்ணங்கிகளால் இலகுவில் பழுதடையும். மேலும் மீனில் காணப்படும் கொழுப்பமிலங்கள் ஒட்சியேற்றம் அடைவதாலும் மீன் பழுதடையலாம். பழுதடையாத மீனை அதன் பிரகாசமான கண்கள், செந்நிறமான பூ, தோலுடன் இறுக்கமாக உள்ள செதில்கள் என்பவற்றின் முலம் கண்டறியலாம். மீனானது பிடிக்கப்பட்டவுடன் குறைந்த வெப்பநிலையில் பேணப்படுதல்,மீனைக் கழுவுவதற்கு சுத்தமான நீரைப்பயன்படுத்துதல், பிடிக்கப்பட்ட மீனின் பூ மற்றும் குடற்பகுதிகளை அகற்றுதல் என்பன மீன் பழுதடைவதைத் தாமதிக்கின்றன.

நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் மீனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாது. உதாரணமாக எமது நாட்டில் கரையோரப் பிரதேசங்களில் மீன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆனால் மத்திய பிரதேசத்தில் குறைவாகவே கிடைக்கிறது. எனவே மீனை குளிரூட்டிய நிலையில் பாதுகாப்பாக் கொண்டு செல்லுதல் அவசியம் ஆகும். மீன் அதிகமாகக் கிடைக்கும் போது அதனை உப்பிட்டு உலர்த்துதல், குளிரூட்டல், புகையூட்டல், தகரத்தில் அடைத்தல், மீன் ஊறுகாயிடல், மீன்புளித்தீயலிடல் என்பன மூலம் பாதுகாக்க முடியும்.