யோகக் கலையை ஒரு பாடவிதானமாக ( பாகம் – II)

( சட்டத்தரணி கனக நமநாதன் )

ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடு என கூறப்படுமேயானால் அது அங்கு வாழும் மக்களின் கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் அடையப்பெற்ற சிறந்த பெறுபேற்றுத் தன்மையைக் கொண்டே குறிப்பிட முடியும். கல்வியில் சிறப்புறவும் பொருளாதாரத்தில் மேம்புறவும் அதற்கான தகுதியைப் பெற அங்குள்ள சமுதாயம் ஆரோக்கிய வாழ்வுடன் எந்தளவுக்கு பொருந்தி வாழ்கின்றார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. ஆகையால் ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு அம்மக்களின் ஆரோக்கியமான வாழ்வு மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒருவரது உடற் சுகம் மட்டுமன்றி அவரது உள்ளத்திலும் நிம்மதியிருக்க வேண்டும்.
ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு நன்னிலையில் வைத்திருக்க முடியும் என குறிப்பிடப்படவேண்டுமாயின் அது அவர் உண்ணும் சீரான உணவினாலும் அவர் :பண்ணும் சீரான உடற்பயிற்சியினாலும் அவர் மனதில் எழும் சீரான எண்ணங்களினாலுமே அது அமையும்.
உண்ணும் உணவு சிக்கலின்றி சீரணிக்கக்கூடிய தன்மை வாய்ந்ததாக நார்த்தன்மை கொண்ட இலைவகை காய்கறிகளை கூடுதலாக உட்கொள்வதாகவும் தேவையற்ற கொழுப்புச் சத்துக்கள் தவிர்கப்பட்டதாகவும் சுத்தமான நீரை அதிகளவு பருகுவதினாலும் அடிக்கடி சுவையான இனிப்பு அல்லது காரமான திண்பண்டங்கள் பொரித்த எண்ணைப்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பதினாலும் உடலை உறுதியாக செம்மையாக்கலாம்.
எண்ணும் எண்ணங்களைப் பற்றி கூறவேண்டுமானால் பிறருக்கு தீங்கிழையாமை தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது பிறரிடம் அன்பையும் இரக்கத்தையும் காட்டுவது என்பவை மனதில் அமைதியை உண்டாக்கும்.
அமைதியான எண்ணங்கள்;;;;;;;; பிறரின் உரிமைகளை மதித்து வாழும் விருப்பங்கள் பொதுவான விடயங்களில் தனது பங்களிப்பை முன்வந்து செய்யும் முயற்சிகள், கோபம், காழ்ப்;புணர்ச்சி, பொறாமை, பழிதீர்த்தல், வஞ்சகம் நினைத்தல், பரிகாசம் செய்தல்இ போகவிட்டு புறம்சொல்லல் போன்ற கீழ்த்தர எண்ணங்களிலிருந்து விடுபட்டு வாழுதலும் சூழல் சுற்றாடல்களை சுத்தமாக வைத்திருக்கும் மனப் பக்குவங்களும் முதியவர்கள் வறியவர்;கள், நோயாளர்;கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மீது இரக்கம் காட்டல் போன்றவற்றினால் ஒருவரது மனம் சாந்தப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும்.
இப்பொழுது நாங்கள் சிந்திக்க வேண்டியது பண்ணும் பயிற்சிகளான எமது சரீரத்திற்கு தேவையான தேகப்பயிற்சிகள் எவையென்பதே. இது பற்றி ஆராயும்போது ஆதி மனிதர்கள் தங்களுக்குத் தேவையான உணவை தேடி ஓடித்திரிந்தும் வேட்டையாடியும் மரங்களில் ஏறி கனிகளைப் பறித்தும் உடல் உழைப்பை வெளிப்படுத்தியே உணவைப் பெற்றுக் கொண்டார்கள். காலங்காலமாக பின்தொடர்ந்து வந்த மனித சமுதாயம் விவசாயம் மிருக வளர்ப்பு போன்றவற்றில் தமது உடல் உழைப்பை செலுத்தியே ஆகாரத்தைப் பெற்றுவந்தது.
உலகம் விஞ்ஞானமயமாகியதால் பல துறைகளிலும் தொழில்நுட்பங்கள் விரிவடைந்து வேகமாக வளர்ந்து சமுதாயத்தை ஆட்கொண்டு விட்டதின் பலனாக மனிதனின் உடல் உழைப்பினால் செய்யப்படும் வேலைகளில் அனேகம் இயந்திர மயமாக்கப்பட்டுவிட்டது. வீட்டின் சமையலறையில் பாவிக்கப்படும் மின் உபகரணங்களும் உடுபுடவை சலவை இயந்திரமும் ஒரு பெண்ணின் வேலைப்பழுவைப் பெருமளவு குறைத்துவிட்டது. அதே போன்று வர்த்தக தாபனங்கள், அலுவகங்கள், கணனி மயமாக்கப்பட்டு கதிரையில் இருந்த நிலையில் வேலை செய்யும் நிலைக்கு மாறிவிட்டது. விவசாய நிலங்கள் விலங்குப் பண்ணைகள் என்பன பல புதிய தொழில்நுட்ப சாதனங்களினால் இயந்திரமயமாக்கப்பட்டு பெருமளவு உடல் உழைப்பின்றி அவற்றில் பயன்பெறக் கூடியதான வகையில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.
ஒரு மனிதனின் உடலில் அவன் உண்ணும் உணவு சீராக சீரணிப்பதற்கும் அந்த உணவிலிருந்து பெறப்படும் குருதியில் தேவையான புரதச்சத்து தாதுச்சத்து விற்றமின் சத்துக்கள் அமையப்பெறுவதற்கும் தேவையற்ற மேலதிக கொழுப்புக்களை அகற்றுவதற்கும் உடலில் உள்ள குருதியை சுத்திகரித்தலுக்கும் குருதி உடலின் எல்லாப்பாகங்களுக்கும் சென்றடைந்து கலங்களை புதிப்பித்து சீராக்கி சிறந்த நிலையில் தொழிற்பட வைத்திருப்பதற்கும் மனிதன் தனது உடலிலிருந்து வியர்வையை வெளியேற்றக்கூடிய முறையில் உடலை வருத்தி செயற்பாடுகளைச் செய்யவேண்டியது அவசியமாகின்றது. காலை மாலை வேளைகளில் நடத்தல், ஜிம் கூடங்களுக்குச் சென்று உடற்பயிற்சி செய்தல் வீட்டிலேயே திரட் மில் (Tred Mill) போன்ற சாதனங்களில் உடற்பயிற்சி செய்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அவை மேல்த்தட்டு வர்க்க மக்களுக்கே பொருத்தமானதாகும். ஆகையால் சாதாரண மக்களும் இவ்வாறான தேகப் பயிற்சிகளுக்கு தேவையான ஒரு சுலப முறையை கையாள்வது இக்காலத்தின் தேவைப்பாடாகும்.
கல்விக்கூடங்களைப் பொறுத்தளவில் பெற்றோர்களும் மாணவர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பரீட்சைகளில் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு வருகின்றார்கள். முன்னைய காலங்களில் இருந்தது போலவும் பாரதியாரின் ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்ற பாடலுக்கமைவாகவும் மாலை வேளைகளில் கைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், மட்டைப்பந்தடி, பூப்பந்தாட்டம், வலைபந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், நீச்சல் போன்ற உடலுக்கு உறுதி தரும் விளையாட்டுக்களில் ஈடுபடாமல் மாலை வேளைகளிலும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சென்று படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இல்லாத நிலைமையில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்கள். அதனால் உடல் ஆரோக்கியத்தை கவனிக்காது விடுவதால் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள் என்ற தகவல் புள்ளி விபரங்கள் மூலம் வெளியாகி வருகின்றது. உடல் பருமனாதல் (ழுடிநளவைல) நீரழிவு நோய், சோகை போன்றவற்றால் பல இளைஞர்கள் வாழ்க்கையை முழுதாக அனுபவிக்க முடியாது இளமையில் முதுமையாகி அல்லல் படுகிறார்கள்.
பொருட்செல்வம், கல்விச் செல்வம் போன்றவற்றிலும் மேலானது ஆரோக்கியமான உடற்செல்வம். உடலில் உள்ள ஒவ்வொரு உள்ளுறுப்புக்களுக்கும்; அவற்றின் செயற்பாட்டுக்கும் யோகாசனப்பயிற்சி புத்துணர்ச்சியளிக்கின்றது. இதன் காரணமாக அவ்வுறுப்புக்கள் சுறுசுறுப்படைந்து தங்களது வேலைகளை திறம்படச் செய்ய வழிசெய்கிறது மட்டுமன்றி நோய்களாலும் பிற வெளிக் காரணிகளாலும் உடல் உறுப்புக்கள் தாக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றது.
யோகப்பயிற்சி செய்யும் போது ஒருவரது உடல், சுவாசம், மற்றும் எண்ணம் ஆகிய மூன்றும் ஒரு நிலைப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக யோகப்பயிற்சி செய்யும் அவ்வேளைகளில் தியானப்பயிற்சியும் ஒருங்கே அமைகின்றது. இந்த உடற்பயிற்சியும் தியானப்பயிற்சியும் அவனது மனதில் தூய்மையான எண்ணங்களை வகுத்துக்கொண்டேயிருக்கும். இந்த யோகப் பயிற்சியையும் தியானப்பயிற்சியையும் ஒருவர்; தொடர்ந்து செய்து வருவாரானால் அவர் சமுதாயத்தில் ஒரு மெச்சத்தக்க மனிதராக மிளிருவார் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இப்பயிற்சிகள் மனதில் அமைதியை உண்டாக்குவதினால் கற்றலுக்கு ஏற்ற நல்ல மனப்பக்குவத்தை அளிக்கும். ஆகையால் கல்வியிலும் ஒழுக்கத்திலும் மேம்படவும் திசைமாறிப்போன இளைஞர் சமுதாயத்தை சிறப்புறும் சமுதாயமாக மாற்றிக்கொள்ளவும் பாடசாலைகளில் யோகக்கலையை ஒரு பாடவிதானமாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த முயற்சியை ஒரு முன்மாதிரியாக வட-கிழக்கு இரு மாகாணங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்தை தெரிவுசெய்து அதிலுள்ள கல்விக் கூடங்களில் ஆரம்பித்து அதன் பிரதிபலன்களை அவதானித்து மற்றையப் பகுதிகளுக்கு விரிவாக்கலாம் என்ற ஆலோசனையும் இத்தால் முன்வைக்கப்படுகின்றது.
யோகக்கலை ஒரு பொக்கிசம். அதனைச் கற்றுவிப்பதற்கு ஆவண செய்தால் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்ததான நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் ஒரு முதலீடாகும். முதலில் சரியான முறையில் பயிற்சியளிக்கக்கூடிய யோகா ஆசிரியர்களை உருவாக்குதல் ஒரு முக்கிய தேவைப்பாடாகும்.
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான உடலும் ஆனந்தமும் அமைதி கொண்ட மனமும் வேண்டுமென்றே சராசரி மக்கள் மனதார விரும்புகின்றார்கள். தேக ஆரோக்கியம் ஒன்றே இத்தேவைகளனைத்தையும் பெற அடிப்படையாகவுள்ளது.
அருட்திரு இராமலிங்க அடிகளாரும் தமது இறை வேண்டுகோளில் “நோயற்று நான் வாழ வேண்டும்” என்று வழிபட்டார்.
“Health is Wealth -When Health is lost – everything is lost  என்பது ஆங்கிலப் பழமொழி;. நோய் வராமல் தடுப்பது மட்டுமல்ல நோய்களுக்கு நிவாரணம் செய்யவும் ஆசனப் பயிற்சி உதவும்.
ஆரோக்கியத்தின் அறிகுறிகள் நல்ல செமிபாட்டுச் சக்தி நல்ல பசி நல்ல நித்திரை, சுறுசுறுப்பான உடல், அளவான நாடித்துடிப்பு, அளவான தேக உஸ்ணம், சீரான மலசல வெளியேற்றம் உடற்கழிவுகள் வியர்வையாக வெளியேற்றம் கடமைகளைச் செய்வதில் ஆர்;வம் நோய்கள் வியாதிகள் எதுவும் இன்றிய வாழ்க்கை இவைகளேயாகும்.
உடலின் உறுப்புக்களனைத்தினதும் நேர்;த்தியான செயற்பாட்டிற்கு தூண்டும் ஒரு சக்தி உடல் முழுவதும்; நுண்ணிய நாடி நரம்புகளின் மூலமாக தொழிற்படுகின்றது. ஆசனப் பயிற்சி இதனை ஊக்குவிக்கின்றது
உடம்;பிலுள்ள பீனியல் (Pineal) பிற்யூற்றரி (Pituitary) தைரோல்ட் (Thyroid) தைமஸ் Thymus) அட்றினால் ((Adrenal) என்னும் கோளங்கள் (Glands) உற்பத்தி செய்யும் இரசங்கள் (Hormone) சரீர வளர்ச்சிக்கும் போ~pப்புக்;கும் நோய் எதிர்ப்புக்களுக்கும் உதவுகின்றது. மனக் கவலைகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.
யோகாசனப் பயிற்சிகள் நரம்புத் தொகுதிகளுக்கும் கோளங்களுக்கும் ஜீரண உறுப்புக்களுக்கும் அசைவுகளைக் கொடுப்பதின் மூலம் ஊக்கமளித்து அங்கெல்லாம் இரத்த ஓட்டத்தை சீராக்கி புத்துயிர் பெறச் செய்கின்றது. இதனால் ஆரோக்கியபலத்துடன் மனப்பலமும் உருவாக்கப்படுகின்றது. இதன் விளைவுகளாக ஒழுக்க பலமும் ஆன்மீக பலமும் சேருகின்றது. வேறு உடற்பயிற்சிகள் உடலுக்கு பலத்தை மட்டும் கொடுக்கும். ஆனால் அது ஆரோக்கியம் மனோதிடம் ஒழுக்கம் நோயற்ற வாழ்வு போன்றவற்றை கொடுக்காது.
நோயற்ற ஆரோக்கியமான வாழ்வுக்கு இளம் சமுதாயத்தை அழைத்துச் செல்லக் கூடியதான யோகக் கலையை வருங்கால சமுதாயத்தின் நலன் கருதி வட – கிழக்கு மாகாண அரசுகள் பாடசாலைகளில் ஒரு பாடவிதானமான கற்பித்தலை உறுதிபடுத்தி வெகுவிரைவில் அறிவிக்கவேண்டும்.