குழந்தைக்கு எண்ணெய் பூசி உடம்பு பிடித்துவிடுதல்

குழந்தைக்கு எண்ணெய்பூசி உடம்பு பிடித்துவிடுதல்
(Oil Massage for Babies)

சித்தமருத்துவ கலாநிதி
சே.சிவசண்முகராஜா M.D(S) (India)
குழந்தை மருத்துவம்
சிரேஸ்ட விரிவுரையாளர்
சித்தமருத்துவத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

அறிமுகம்
பிறந்து ஒரு மாதம் வரையுள்ள குழந்தையைப் பச்சிளங்குழந்தை ((neonate) என்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையைக் கைக்குழந்தை அல்லது கைம்மகவு (infant) என்றும் அழைப்பது வழக்கம். புதிதாகப் பிறந்த குழந்தை அன்னையின் அரவணைப்பில் ஆறுதல் பெறுகிறது. பாதுகாப்பைத் தேடிக்கொள்கிறது. மகிழ்ச்சியடைகிறது.அதாவது அன்னையின் தொடுதல் அல்லது ஸ்பரிசத்தை அது பெரிதும் விரும்புகிறது.
அன்னையின் ஸ்பரிசத்தை அதிகரிக்கும் ஒரு செயலாகவும் குழந்தையின் உடலுறுப்புகளுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு செயலாகவும் பாரம்பரியமுறையிலான குழந்தைக்கு உடம்பு பிடித்துவிடும் செயல் அமைகிறது.

தேவையான பொருட்கள்
1. பனை ஓலைத் தடுக்கு (சிறு பாய்)
2. கிரந்தி எண்ணெய்
3. நல்லெண்ணெய்
4. வெள்ளைத்துணி அல்லது சிறு துவாய்

செய்முறை
ஓலைத்தடுக்கின் மத்தியில் ஒரு வெள்ளைத்துணியை விரித்து அதன் ஆமல் குழந்தையை நிமிர்த்தி (மல்லாக்க) கிடத்தவும்.
உள்ளங்கையில் சிறிதளவு கிரந்தி எண்ணெயை எடுத்து அதைக் குழந்தையின் தலையில் மெதுவாகத் தடவவும்.
பிறகு சிறிது நல்லெண்ணெயை எடுத்து குழந்தையின் நெற்றி கன்னம் காதுச்சோணை என்பவற்றின் மீது இலேசாக அழுத்தித் தடவவும். அவ்விதம் தடவும் போது எக்காரணம் கொண்டும் கண்ணில் எண்ணெய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும் கண் காது மூக்கு என்பவற்றுள் எண்ணெய் விடுதல் கூடாது.
பிறகு குழந்தையின் தோள் மார்பு வயிறு போன்ற பாகங்களுக்கு எண்ணெய்பூசி இலேசாகப் பெருவிரலால் அழுத்திப் பிடித்துவிடவும்.
அதன் பிறகு கைகளுக்கு எண்ணெய்பூசி அவற்றை நீட்டி மடித்துப் பிடித்து விடவேண்டும்.
பிறகு தொடை முழங்கால் கால்கள் உள்ளங்கால் என்பவற்றுக்கு எண்ணெய்பூசி அவற்றையும் நீட்டி மடித்து மெதுவாகப் பிடித்து விடவேண்டும்.
அதன் பிறகு குழந்தையைக் குப்புறக்கிடத்தி அதன் கழுத்தின் பின்புறம் முதுகு நாரிப்பிரதேசங்களுக்கு எண்ணெய்பூசி இரண்டு கைப்பெருவிரல்களையும் குழந்தையின் முள்ளந்தண்டுக்கு அருகாக நாரிப்பகுதியில் வைத்து கீழிருந்து மேலாக கழுத்துப்புறத்தை நோக்கி 3 . 4 தடவையும் அதேபோல கழுத்துப் பகுதியிலிருந்து நாரியை N நாக்கி 3 . 4 தடவையும் மெதுவாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.
இங்ஙனம் குழந்தைக்கு எண்ணெய்பூசி உடம்பு பிடித்து விட்ட பின்னர் அதை ஓலைத் தடுக்கில் நிமிர்த்திக் கிடத்தி (வீட்டு விறாந்தையில்) சிறிது நேரம் சூரிய ஒளியில் கிடத்தி விடுவதும் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்பிறகு குழந்தையை இளஞ்சூடான நீரில் குளிக்க வார்ப்பர்.
பொதுவாக குழந்தைக்கு எண்ணெய்பூசி உடம்பு பிடித்துவிடும்போது தலைக்குக் கிரந்தி எண்ணெயும் உடம்புக்கு நல்லெண்ணெயும் பூசிப் பிடிப்பது வழக்கம். சிலர் தலைக்கும் உடம்புக்கும் கிரந்தி எண்ணெயையே பூசுவதும் உண்டு.

காலம்
பொதுவாகக் குழந்தை பிறந்து 11 . அல்லது 15 அல்லது 31 ஆம் நாளின் பின்னர் ஆரம்பித்து ஒன்று விட்டொரு தினத்தில் எண்ணெய்பூசி உடம்பு பிடித்து விடுவது வழக்கமாக உள்ளது. அவ்விதம் ஆறு மாதங்கள்வரை செய்த பின்னர் வாரத்துக்கு ஒரு நாள் எண்ணெய்பூசி உடம்பு பிடித்து விடுவதும் உண்டு.
பொதுவாகக் காலை 8.00 மணி. – 10.00 மணிக்கிடையில் எண்ணெய்பூசி உடம்பு பிடிப்பது நல்லது.

எண்ணெய்பூசி உடம்பு பிடிக்கக் கூடாத நிலமைகள்
குழந்தைக்குத் தடிமன் காய்ச்சல் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலைகளிலும் குறைமாதக்குழந்தைக்கும் மழை குளிர் மிகுந்துள்ள வேளைகளிலும் எண்ணெய்பூசி உடம்பு பிடித்தல் கூடாது.
பொதுவாக குழந்தையின் தாய் அல்லது பாட்டியே எண்ணெய்பூசி உடம்பு பிடித்து விடுவது வழக்கம். எனவே அவர்களும் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். குழந்தைக்குக் குளிக்க வார்த்த பின்னர் சிலர் அதன் கண்கள் காது முலைக்காம்பு கொப்பூள் போன்ற பகுதிகளில் வாயால் ஊதுவதும் வழக்கம். ஆனால் அவ்விதம் செய்வது கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். ஏனெனில் ஊதுபவரிடமிருந்து குழந்தைக்குக் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்புகளுண்டு.

எண்ணெய்பூசி உடம்பு பிடித்துவிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
1. தாய் குழந்தைக்கு எண்ணெய்பூசி உடம்பு பிடித்துவிடுவதனால் தாயின் ஸ்பரிசம் குழந்தைக்கு அதிகம் ஏற்படுகிறது. அதனால் அது மிகவும் அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறது. பாதுகாப்புணர்வைப் பெறுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகம் ஏற்படுகிறது.
2. தாய் அல்லது பாட்டி இவ்விதம் உடம்பு பிடித்து விடும்போது குழந்தையுடன் கதைத்தபடி (குழந்தைக்கு விளங்கினாலும் சரி விளங்காவிட்டாலும் சரி) செய்கின்றனர். உ-மாக கைபிடி கால்பிடி மூக்குப்பிடி என்று சொல்லிச் சொல்லியே அவ்வுறுப்புகளைப் பிடித்துவிடுகின்றனர். மூக்குப்பிடிக்கும்போது “ நாய்க்கு மூக்கில்லை நரிக்கு மூக்கில்லை
என் செல்லத்துக்கு மூக்கு வா மூக்குவா” என்று கூறி மூக்குப்பிடிப்பர்.
இவ்விதம் குழந்தையுடன் கதை பேசியபடி உடலுறுப்புக்களைப் பிடித்து
விடுவதால் குழந்தை திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறது. ஊளவியல்ரீதியாக
இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
3. குழந்தையின் உடலுறுப்புகளிற் சில ஒழுங்கான அமைப்பற்று இருக்கக்கூடும். உ-மாக தலை ஒரு பக்கம் கோணலாக இருக்கலாம். மூக்குச் சப்பையாக இருக்கலாம். ஆப்படியான நிலைமைகளில் தலையைச் சரியான முறையில் அழுத்திப்பிடித்துவிடுவதனாலும் சப்பையான மூக்கை மெதுவாக இழுத்து விடுவதனாலும் அவை ஒழுங்கான அமைப்பைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்.
4. குழந்தையின் உடலுறுப்புகளில் குறைபாடுகளேதும் இருப்பின் அவற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் இவ்விதம் உடம்பு பிடித்தல் உதவுகிறது. உ-மாக பிறப்புவாசியாக ஏற்படக்கூடிய இடுப்பு மூட்டு விலகல் (உழபெநnவையட னளைடழஉயவழைn ழக hip தழiவெ) இதன் போது இரண்டு கால்களின் நீளத்திலும் வித்தியாசம் காணப்படும். அதாவது ஒரு கால் நீளமாகவும் மற்றக்கால் நீளம் குறைந்தும் காணப்படும். கால்களுக்கு எண்ணெய் பூசும்போது அவற்றின் நீளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதும் ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது. எனவே தாய் அல்லது பாட்டி குழந்தையின் காலில் மாற்றம் இருந்தால் அதை இலகுவில் கண்டறிந்து விடுவர்.(அவ்விதம் கண்டறியப்படாவிடின் 1 வயதுக்குப் பின்னர் குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போதுதான் அதன் காலில் குறைபாடிருப்பது தெரியவரும். இரண்டு பக்க இடுப்பு மூட்டுக்களிலும் பிறப்புவாசியாக மூட்டு விலகல் ஏற்பட்டிருப்பின் (congenital dislocation of hip joint) அதை முன்கூட்டியே கண்டறிவது கடினமாகும்)
5. சில குழந்தைகளுக்குப் பிறந்து 2 . 3 தினங்களின் பின் கண் தோல் மஞ்சளாகி மஞ்சட்காமாலை அல்லது செங்கமாரி ஏற்படுவதுண்டு. இதனை physiological jaundice என ஆங்கிலத்தில் கூறுவர். இது ஒரு ஆபத்தான நேய்நிலை அல்ல. 7 – 10 நாட்களில் தானாகவே மாறிவிடும். ஆயினும் சில குழந்தைகளில் இது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும். பச்சிளங்குழந்தையை எண்ணெய்பூசிய பின் சூரியஒளி படும்படி கிடத்துவதனால் இவ்வித மஞ்சட்காமாலை விரைவில் மறைந்துவிடும். நவீனமருத்துவர்கள் கூட இவ்வித காமாலையுள்ள குழந்தையைச் சிறிதுநேரம் வெய்யில் படும்படி வைத்திருக்கும்படி ஆலோசனை கூறுவர்.
6. குழந்தையைச் சூரியஒளி படும்படி கிடத்துவதனால் அதன் தோலில் உயிர்ச்சத்து னு தொகுக்கப்படுவதற்கான வாய்ப்புண்டாகிறது.
7. குழந்தையின் உடம்பிற்கு கிரந்தி எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பூசுவதனால் அதன் தோலில் நுண்கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. நல்லெண்ணெயிலுள்ள அத்தியாவசியமான கொழுப்பமிலங்கள் ((essential fatty acids) Staphylo coccus போன்ற பக்ரீரியாக்களின் வள(ர்ச்சியைத் தடுப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

முடிவுரை
பாரம்பரிய முறையிலான குழந்தைக்கு எண்ணெய்பூசி உடம்பு பிடித்துவிடும் செய்கையானது அதன் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் (growth) விருத்திக்கும் (developmen) உதவும் ஒன்றாக அமைகிறது.

இக்கட்டுரை ஆயர்வேத திணைக்கள வெளியீடான
சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது.