அதிகாரிகளின் பிழையான செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குரிமை

 

கனக நமநாதன்      LL.B. (Col. Uni.)

அரச அதிகாரிகளின் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் (Abuse  of Power) அத்துமீறல்கள் (Excess ) இயற்கை நீதிக் கோட்பாட்டை அனுசரியாமை (Not  adhering  Natural Justice ) நியதிச்சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாது தவறு செய்தல் (Not  following  the  Procedures ) கடமையைச் செய்யாதிருத்தல் ( Not performing  the  Duty ) போன்ற நிர்வாக அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குரிமை நிர்வாகச் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாகமானது பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட நியதிச் சட்டங்களின் பிரகாரம் அவற்றை செயற்படுத்துவதற்குத் தேவையான தீர்மானங்களை எடுத்தல், பார்வையிடுதல் பரிசோதனை செய்தல், விசாரணை செய்தல், உரிமங்களை வழங்குதல், தகுதிகளைப் பேணல் மற்றும் பொது மக்களிடையே ஏற்படும் பிணக்குகளுக்கு தீர்வு போன்றவற்றை நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய கீழ்மட்டத்தில் எடுத்துச் சென்று அவற்றை செயல்படுத்துவதற்காகத் துணைநிலைச்சட்டமாக்குதல் (Subordinate Legislation) போன்ற கடமைகளில் ஈடுபடும்.

நிறைவேற்றுத்துறையினர் சில சந்தர்ப்பங்களில் நீதித்துறையின் கடமைகளையும் செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும். அவ்வாறு செய்யும் பொது அதை மருவிய நீதிக்கடமை (Quasi Judicial Function) எனக் கூறலாம

நிர்வாகச்சட்டத்தின் நோக்கம்  நிறைவேற்றுத்துறையினராகிய  நிர்வாகிகள் பொதுமக்களின் உரிமைகளை மீறாதவாறு எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதற்கு வழிவகைகளைக் காண்பதேயாகும். பொது மக்களிடையே சட்டம், ஒழுங்கு நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதும் அதே சமயம் பொது மக்கள் நிர்வாகிகளால் அடக்கி ஒடுக்கப்படாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும். இது சட்டவாட்சித் தத்துவம் ஒழிக்கப்படாது சாதாரண மக்களின் உயர்ந்த பட்ச சுதந்திரத்தைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் நிர்வாகிகள் நடந்து கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையின் அரசியல் அமைப்பின்படி உள்நாட்டிலேயே இருக்கும் சாதாரண நீதிமன்ற அமைப்புக்குள்ளேயே பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பரிகாரம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துணைநிலைச்சட்டம் (Subordinate Legislation)
நிர்வாகத்தினரின் முக்கிய கடமைகளிலொன்று பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்ட நியதிச்சட்டத்தின்படி செயல்படுத்துவதற்கு அந்நியதிச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகார எல்லைகளை மீறாத வகையில் துணைநிலைச் சட்டங்களை உருவாக்கல் வேண்டும்.
இங்;கு நிர்வாகிகள் எனப்படும் போது சனாதிபதி, அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், மற்றும் திறைசேரி, உயர்நீதிமன்றம், உள்ளுராட்சித் தலைவர்கள்,பாராளுமன்றத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட பகிரங்கக் கூட்டுஸ்தாபனங்கள், ஆகியவை துணைநிலைச் சட்டங்களைத் தமது தேவைகளுக்கேற்ப நியதிச்சட்ட வரம்புக்குள் இயற்ற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலைமையில் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் வரையில் நிறைவேற்று சனாதிபதி முறைமை முற்றாக மாற்றம் பெறவில்லை. நிறைவேற்று சனாதிபதி முறைமை இல்லாது ஒழிக்கப்பட்டால் அதியுயர் நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவைக்கு ( Cabinet ) வந்துவிடும்.

துணைநிலைச் சட்டங்களை அரச நிர்வாகிகள் ஆகிய சனாதிபதி ஆக்கும்போது கட்டளைகள் ( Orders ) என்றும் கூறப்படும். உள்ளுராட்சி சபைகள் மற்றும் கூட்டு ஸ்தாபனங்கள், அரச வங்கிகள் துணைநிலைச் சட்டத்தை உருவாக்கும் போது அவற்றை உபவிதிகள் (Bye Laws ) எனக் கூறப்படும். உயர் நீதிமன்றம் சட்டத்தால் இயற்றப்பட்ட உப குழுக்கள் போன்றவை இயற்றும் போது அவற்றை விதிகள் (Rules) எனக் கூறப்படும். திறைசேரி, திணைக்களத் தலைவர்கள், அமைச்சுச் செயலாளர்கள் போன்றவர்களால் இயற்றப்படும் துணைநிலைச் சட்டத்தைச் சுற்று நிருபங்கள் ( Circulers) எனக் கூறப்படும்.
துணைநிலைச்சட்டங்கள் ஆக்கப்பட்டாலும் அவற்றில் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட விடயதான அமைச்சர்களினால் இயற்றப்படும் துணைநிலைச் சட்டங்களான பிரமாணங்கள் (  Regulations) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அனேகமான அரச அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் அது சம்பந்தமான சட்டத்தின் எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டுமென்பதை இறுக்கமாக எண்ணாது தாங்கள் சட்டத்தினால் காப்பாற்றப்படுவார்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கச் செயற்படுகின்றார்கள். இது நாட்டின் அபிவிருத்தியைப் பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் நேர்மை, நியாயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும் ஒரு காலாக அமைகின்றது.
இவ்வகையாக சட்ட எல்லையை அத்து மீறுவதும் சட்டங்களின் நோக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும் சட்டம் பற்றிய பிழையான பொருள் கோடல் ( Interpretation ) செய்வதும் மேலதிகார அச்சுறுத்தலுக்குப் பணிந்து பிழையாக நடப்பதும் தேவையானவர்களுக்குத் தனிச்சலுகையளித்தலும் மேலும் வேலையில் சிரத்தையின்றி மந்த போக்குகளும் கவனயீனங்களும் குடிகொண்டிருப்பதைப் பல தற்கால அதிகாரிகளிடம் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வகையான அரச நிர்வாகமானது அமைச்சர்களினது சபையில் “கபினற்” ஆரம்பமாகி கீழ்மட்டத்திலுள்ள உத்தியோகத்தர் வரை எடுத்துச் செல்லப்படும். தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் நிர்வாகம் சனாதிபதியின் கட்டளைகளிலிருந்து செயற்பாடுடையதாக அமைகின்றது. ஒவ்வொரு விடையத்துக்கும் அது சம்மந்தமான வழிநடத்தும் சட்டவாக்கங்கள் பாராளுமன்றத்தினால் உருவாக்கப்படுகின்றது. இந்த நியதிச் சட்டங்கள் பரந்தளவில் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் நோக்கங்களையும் அதனை அடையத் தேவையான செயற்பாடுகள் எந்த எல்லைக்குள் அமையவேண்டுமெனக் கூறுகின்றது. இந்த நியதிச்சட்டங்களில் கூறப்படும் எல்லைகளுக்குட்பட்டதாக அச் சட்டத்திற்குத் தேவையான பிரமாணங்களை ( Regulations) அந்தத் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இயற்றுவார். இப் பிரமாணங்கள் தாய்ச்சட்ட அதிகார எல்லைக்குள் அச்சொட்டாகச் செயற்படும் விதம் பற்றிக் கூறும். அதன் பின்னர் அமைச்சுச் செயலாளர்கள் அல்லது திணைக்களத்தலைவர்கள் பிரமாணங்களின் வியாக்கியானமாகச் சுற்று நிருபங்களைத் (Circulers) தயாரித்து கீழ்மட்ட அதிகாரிகள் அதன் பிரகாரம் செயல்படக் கூடிய விதத்தில் அனுப்பி வைப்பார்கள். இந்தச் சுற்று நிருபங்களின் துணையைக் கொண்டே அதிகாரிகள் தமது அதிகார எல்லையை வகுக்கின்றார்கள்.
சட்ட அறிவும் பொருள் கோடலும்
ஒவ்வொரு அதிகாரி;யும் தனது அறிவுக்கேற்ப அல்லது விருப்பத்துக்கேற்பச் சுற்று நிருபங்களைப் பொருள் கோடல் செய்யவே முற்படுகின்றார்கள். ஒரே சுற்று நிருபம் சில சமயங்களில் பலரால் பல முரண்பட்ட கருத்துக்களில் பொருள் கோடல் செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. பொருள் கோடல் செய்யும் போது அதனைச் செயற்படுத்துவதில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால் அச் சந்தேகங்களை அல்லது குழப்பங்களை அமைச்சரினால் ஆக்கப்பட்ட பிரமாணங்களையோ அல்லது பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்ட அவ் விடயம் சம்மந்தமான நியதிச்சட்டத்தையோ துணைகொண்டு அவை எந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறிந்து சுற்று நிருபத்தின் பொருள் கோடளைச் செய்ய வேண்டும். சட்டங்கள் ஆக்கப்படும் போது அவை பொது மக்களுக்கு அல்லது பயனாளிகளுக்குப் பொருளாதார ரீதியிலோ அல்லது வாழ்க்கைத் தரமுயர்த்துதலிலோ உதவும் நோக்கத்துடன் இயற்றப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். பொருள்கோடல்கள் எப்போதும் சமுதாயத்தின் நன்மை நோக்கிய தன்மையாகவே செய்யப்பட வேண்டியதன்றித் தனிப்பட்டவர்களுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ உதவக் கூடியதாகப் பொருள்கோடல் இருக்கக்கூடாது.