விவசாயத்தில் நுண்ணங்கிகளின் பங்களிப்பும் சூழல் பாதுகாப்பும்!

                  Prof. G. Mikunthan, Professor in Agricultural Biology, Dean,  Faculty  of  Graduate Studies, University of Jaffna

விரைந்த வளர்ச்சியும் அதிகரித்த விளைச்சலும் என்ற குறிக்கோள்களுக்குள் கட்டுண்டிருந்த விவசாயத்தினால் விதம்; விதமான உள்ளீடுகளுக்கு இயைந்து கொடுக்கக்கூடிய பயிரினங்களை உருவாக்க முடிந்ததேயன்றி சூழலைப்பற்றி எள்ளளவும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆக உள்ளீடுகளும் விளைச்சலும் என்பது பற்றிய பேச்சு மட்டுமே எங்கும் ஒலித்ததேயன்றி மண்ணைப் பற்றியோ, நாம் வாழும் சூழலைப்பற்றியோ எந்தவிதமான கரிசனையும் இன்னமும் காட்டப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. பயிருக்குத் தேவையான வளமான மேற்படை மண்ணை, ஈர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய எந்தவிதமான முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை. முதலாவது பசுமைப்புரட்சி சூழலையும் மண்ணையும் முழுதாகவே மறந்து விட்டது. அதுவே முதல் தவறாகிவிட்டது. தவறுகளிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மண்ணின் வளத்தை மேம்படுத்தும் செயல்களில் இனிவரும் பசுமைப்புரட்சியை நெறிப்படுத்த வேண்டிய கட்டாயத்தினுள் நாம் அனைவரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றோம். இதனை முன்கூட்டியே அனுமானித்திருந்தால் பயிர்ச்செய்கையில் படும் இவ்வளவு அவலமும் ஏற்பட்டிருக்காது. விளைநிலத்தில் உள்ள மண்ணின் உயிர்ப்புத் தன்மையை ஏற்படுத்த அதிலுள்ள நன்மைதரும் நுண்ணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறான நுண்ணங்கிகளின் ஆதிக்கத்தை அதிகரிக்க அவை வாழுகின்ற மண்ணில் அவற்றிற்கான சேதன சேர்வைகளின் கிடைத்தன்மையை அதிகரிக்க வேண்டும்.
விளைநிலத்திற்கு தேவையான மட்கு அதிகமாக இருந்தால் பயிரின் வளர்ச்சியும் மேம்படும். மண்ணிற்குத் தேவையானயளவு சேதனப்பொருட்களை பசளையாகவோ அல்லது ஆதாரப் பொருட்களாக இடும்போது நன்மைதருகின்ற நுண்ணங்கிகள் இவற்றில் பல்கிப் பெருக ஏதுவாக அமையும். அத்துடன், மண்ணினுள் வளமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். மண்ணினுள்ள வாயுப் பரிமாற்றத்திற்கும் நன்மை தரும். நுண்ணங்கிகளின் இயல்பான பெருக்கத்திற்கும் சேதனப் பசளைகள் பெரிதும் உதவுகின்றன.

மண்ணின் தன்மையும் சேதனப் பொருட்களும்
எமது பிரதேசத்திலுள்ள மண்ணின் தன்மைக்கேற்ப சேதனப் பொருட்களை இடுவதன் அளவை நாம் நிர்ணயிக்கலாம். களி மண் தரையாக இருப்பின் சேர்ப்பப்படும் சேதனப் பசளைகள் மண்ணை இறுக்கமல்லாது வேர் இலகுவாக வளர்ந்து வியாபிக்கவும் அகன்று வளரவும் உதவும். அது போல மணற்பாங்கான மண்ணாயின்; அதிலுள்ள ஊட்டச் சத்து மிக மிகக் குறைவாக இருப்பதனால் சேதனப் பொருட்களின் சேர்க்கை மண்னை வளமாக வியாபித்திருக்க வைத்திருக்க பெரிதும் பயன்படும். மண்ணின் வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் கார அமிலத் தன்மை என்பன இங்கே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். களி மண் தரையில் சேதனப் பசளைகளை அதிகளவில் இடக்கூடாது. அதுவும் உக்காத சேதனப் பொருட்களை இடக்கூடாது. களிமண்ணினது நீர்பிடித்து வைத்திருக்கும் தன்மை அதிகமாக இருப்பதனால் அதிகளவில் உக்காத சேதனப் பொருளை இடும்போது காற்றின்றிய சுவாசம் நிகழக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். இது இறுதியில் விளைவிக்கும் பயிரின் வேர்ததொகுதிக்கு எதுவிதமான நன்மையுஞ் செய்யாது மாறாக தீங்கினை விளைவிப்பதாகவே அமையும்.

நன்றாக உக்காத சேதனப்பசளைகளை வாரியிறைத்துவிட்டால் போதும் என எண்ணக்கூடாது. காற்றின்றிய சுவாசத்தை ஊக்குவித்தால் காற்றுச் சுவாசம் மூலம் இனம் பெருக்கும் நன்மை தரும் நுண்ணங்கிகள்; மண்ணினுள் அழிவுற்று விடும். கிட்டத்தட்ட நீர்கூடி „சேறு… போன்றதொரு நிலைமை ஏற்படும்போது வேர்களுக்குத் தேவையான சுவாசம் கிடைக்காமையினால் வேர் மயிர்கள் அழுகத் தொடங்கி பின் வேரையே அழுக வைத்துவிடும். வழக்கமாக நாம் குளிப்பதற்கு பயன்படுத்தும் நீரை வாய்க்கால் மூலம் தொடர்ந்து பாயவிடும் இடங்களில் நீர் தேங்கியிருக்கும் நிலை வரும்போது மண்ணினால் அகத்துறிஞ்ச முடியாத நிலையில் காற்றின்றிய சுவாசத்திற்குள் அப்பகுதி உள்வாங்கப்படும். இது இறுதியில் அதிலுள்ள பயிர்களின் இறப்புக்கு காரணமாகிவிடும். குளிக்கும் கிணற்றுப்பகுதியில் நீர் தொடர்ச்சியாக செல்லும் போது இவ்வாறான நிகழ்வுக்கான ஊக்குவிப்பாக அது அமைந்துவிடும்.

சேதனப் பசளைகளாக பசுந்தாள் பசளைகள்
அசேதனப் பசளைகளுக்கான மாற்றீடாக பசுந்தாள் பசளைகளும் பசுந்தாள் இலைப் பசளைகளும் பயன்படுகின்றன. எங்க;ர் விவசாயிகளுக்கு இவற்றின் முக்கியத்துவம்; தெரியாத நிலையில் வெறுமனே அசேதனப் பசளைகளை மட்டுமே நம்பியிருந்த நிலையிலிருந்து மீள வேண்டிய காலம் கனிந்திருக்கிறது. பசுந்தாள் பசளைகளின் சேர்க்கை மண்ணுக்கு அதன் தன்மையை மேம்படுத்த உதவும். சூழல் மாசடைவதையும் குறைக்கும்.

பசுந்தாள் பசளைகள்
எந்த மண்ணில் விவசாயம் செய்கிறோமோ அந்த மண்ணில் சாதாரணமாக பயிர் செய்வதற்கு முன்கூட்டியே பசுந்தாள் பசளை தாவரங்களை பயிர் செய்யும் முறை பல இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு முன்னரேயே உழுதுவிட்ட வயற்பரப்பில் முதல் மழையுடன் இதன் விதைகளை விதைப்பர். அதனுடன் சேர்த்து அம் மண்ணில் நட வேண்டிய பயிரில் அது மிளகாயா, தக்காளியா, கத்தரியா, புகையிலையா எதுவாகிலும் அதன் நாற்று மேடையையும் அமைக்கப்படும்.
நாற்று நடுவதற்கான பருவம் வரும்போது இங்கே வயற் பரப்பில் பசுந்தாள் பசளையாக விதைத்த தாவரம் பூக்கத் தொடங்கிவிடும். 50சத வீதம் பூத்திருக்கும் நிலையில் அந்த தாவரத்தை மடக்கிபிரட்டி மண்ணினுள் சேர்த்து உழுது விடுவர். ஓரிரு கிழமைகளுள் சணல் உக்கத் தொடங்கிவிடும.; அப்போது நாற்றுப் போட்ட பயிர்களை நடவு செய்வர்.
அவரைக் குடும்ப பயிராக இருந்தால் அது வளியிலுள்ள தழைச் சத்தை இழுத்து வேரிலுள்ள முடிச்சுகளை உருவாக்கும் ரைசோபியம் பக்டீரியாவுடன் சேர்ந்து மண்ணினுள் நிலை நாட்டும். இவ்வகையான தாவர மூலமான தழைச் சத்தின் உற்பத்தி மண் வளத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். இது ஒரு இயற்கை பொறிமுறை. விவசாயிக்கும், சூழலுக்கும் ஏன் எமக்கும் நன்மை தருகின்ற பயிர்ச்செய்கை முறை. இதனை வீட்டுத்தோட்டத்திலும் நாம் முழுமையாகக் கடைப்பிடிக்கலாம்.
இன்னொரு பசுமைப்புரட்சியில் அசேதன இரசாயனங்களின் பாவனையை இயன்றளவில் குறைத்து சேதன முறையிலான இயற்கையை அனுசரித்து செய்யும் பயிர்ச்செய்கை முறையை விரிவுபடுத்த வேண்டும். இருக்கின்ற ஒரு வழியும் இது தானே.
அவரைக் குடும்பத்திலுள்ள பயிர்களுக்கு வளியிலுள்ள நைதரசனை – தழைச் சத்தை வேர் முடிச்சுக்களாக மண்ணில் பதிக்கும் திறன் உண்டு. சணல் தவிர, உழுந்து, பயறு போன்ற பயிர்களைக்கூட இத் தேவைக்குப் பயன்படுத்தலாம்.
அத்துடன் எமது வயற் பரப்பில் களையாக காணப்படும் ‘காவிளாய்’ ஒரு அவரைக் குடும்பப் பயிர். இது வளர்ந்து பூக்க ஆரம்பிக்கும்போது மடக்கி உழுதுவிட்டால் களையாக உள்ளதை பசுந்தாள் பசளையாக்கும் வழிகிடைத்துவிடும். எதற்கும் நேர அளவு தானே முக்கியம். திட்டமிட்டபடி விவசாயத்தை செய்யவிழையும் போது இப் பயிர்ச் „செய்கை முறைகள் நிறைந்த பலனைத் தரும். காவிளாய் பூத்திருக்கும் போது அது பசுந்தாள் பசளை, காய்த்து விதை கொட்டினால் அது தலையிடி தரும் களை.
பசுந்தாள் இலைப் பசளைகள் என்பவை தரிசுக்காணிகளில், உயர் வேலிகளில், பாதையோரத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் ஆகியவற்றின் இலைகளை கொய்து அல்லது கத்தரித்து வயலுக்கு இடுதலாகும். மாறாக பசுந்தாள் பசளைகள் பயிர் செய்யும் நிலத்தில் விளைவித்து அதனுள்ளே இடுதலாகும். இது மண்ணில் உதித்தவை அரைவயதில் சருகாக மண்ணினுள்ளேயே புதைக்கப்படுவதை ஞாபக மூட்டுகிறதல்லவா. பசுந்தாள் இலைப் பசளைகளைப் பயன்படுத்துவதில் எங்க;ர் விவசாயிகள் கில்லாடிகள். ஆனாலும் ஒரு சிலரே இதனைக் கடைப்பிடிப்பதனை அவதானிக்க முடிகிறது.
பசுந்தாள் இலைப் பசளைகளாக உயர்வேலிகளில் வளர்க்கப்படும் பூவரசு, கிளிறிசிடியா அல்லது சீமைக்கிளுவை போன்றவையும், தரிசுக் காணிகளில் வயற்பரப்பில் தானாகவே வளர்ந்திருக்கும் எருக்கலை மற்றும் பன்னை போன்றவற்றின் இலைகளை வெட்டி விட்டு வாட மண்ணைப் பயன்படுத்தும் போது அதனுள் தாழ்த்துவிட்டால் இலைகள் மண்ணினுள் உக்கி வளரும். பயிருக்கு சிறந்த உரமாகி விடும்

பசுந்தாள், பசுந்தாள் இலை பயன்பாட்டில் வேறு பலன்கள்.
இவ்வகைத் தாவரங்களில் இயல்பாகவே பூஞ்சண எதிர்ப்பு, பக்டீரியா எதிர்ப்புசக்தி இருப்பதனால் நாற்றுக்களின் வேரினூடாக ஏற்படும் அநேகமான நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை மண்ணினுள் சேர்ப்பதனால் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய பயிருக்கு வலிமை சேர்க்கும் நுண்ணங்கிகளின் எண்ணிக்கையை குறைவடையவிடாது பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அவற்றின் எண்ணிக்கையை விரைந்து பெருக்கி விடவும் வழி பிறக்கும். இதனால் பயிர்களில் நோயை உருவாக்கும் நுண்ணங்கிகளின் எண்ணிக்கையை, வலிமையை நலிவடையச் செய்து விடலாம். பசுந்தாள் இலைகளை மண்ணினுள் இடும்போது மண் உயிர்ப்புத் தன்மை பெறுகின்றது. அதேநேரத்தில் இரசாயனங்களின் செறிவினை மண்ணில் மாற்றியமைக்கும் செயலையும் இலகுவில் செய்துவிடும். இன்னொரு வகையில் பயிருக்கு கிடைக்கக் கூடிய சத்துக்களாக மாற்றியமைப்பதனால் அவை பயிரினால் இலகுவாக அகத்துறிஞ்சப்பட பயிர் செழித்து வளர்ந்துவிடும். மண்ணினது தன்மை மற்றும் வளம் குறைந்து விடாது பயிர்ச் செய்கை செய்வது சிறந்ததாகும். மண்ணினுள் பயிர்களுக்கு நோயை உருவாக்கும் நுண்ணங்கிகளை பல்கிப் பெருக இடமளித்துவிட்டால் பின்னர் பயிர்ச்செய்கையில் அதுவே பெருந்தலையிடியாகிவிடும்;.
மண் வளத்தை பெருக்கும் அதே நேரத்தில் அதிலிருந்து அதன் வளம் கெடாது உச்சப்பயன்பாட்டைப்பெற நாம் என்றும் முயற்சிக்க வேண்டும். இதற்கு மண்ணினுள் உள்ள நன்மை தரும் நுண்ணங்கிகள் பற்றிய தேடலும் அவைபற்றிய ஆய்வும் எமக்கு இவை பற்றிய பயன்பாட்டை அதிகரிக்க செய்ய வழிசெய்யும். விவசாய செய்கையில் விவசாய பெருமக்களுக்கு தலையிடியாக இருக்கும் பீடைகளையும் நோய்களையும் கட்டுப்படுத்த நன்மைதரும் நுண்ணங்கிகளின்; எண்ணிக்கையை அதிகரிக்க ஆவனசெய்து மண்ணை வளமானதாக உயிர்ப்புள்ளதாக பேணுவோம்.