யாழ். குடாநாட்டில் நிலக்கடிநீர் உவராகுதல் மாசுபடுதல்

( சட்டத்தரணி கனக நமநாதன் )

 

யாழ் குடாநாட்டில்  நிலக்கடிநீர்  உவராகுதல் மாசுபடுதல் போன்றவற்றை அவதானிக்கவும் அவ்வாறு ஏற்படுவதிலிருந்து  தடுப்பதற்கும் அல்லது  குறைவடையச் செய்வதற்கும் அவறிற்கு ஏற்ற பரிகாரம் காணவும் கீழ்காணும் திணைக்களங்கள்  சபைகள்;  ஆகியவை  சம்பந்தப்பட்டவையாகவுள்ளன. அவையாவன (அ) மாகாண  நீர்ப்பாசன  திணைக்களம் (ஆ)  மாகாண விவசாய  திணைக்களம் (இ)மாகாண சுகாதார திணைக்களம் (ஈ) கமநலச் சேவை திணைக்களம்  (உ) உள்ளுராட்சி திணைக்களம் (ஊ) உள்;ராட்சி  சபைகள் (எ) நீர்  வள சபை என்பனவாகும். இதில் கூறப்பட்ட திணைக்களங்கள்  நிருவனங்களிடையே  மண்வளம்  குடிநீர் சம்பந்தமாக கூட்டுச் செயற்பாடுகள்  கலந்தாலோசணைகள் இடம் பெறவேண்டியது மிகவும் அவசியத்தேவையானது.

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மழைநீரின் சேமிப்பு சம்பந்தமாக ஏரிகள் ஆறுகள் பராமரிப்பும் மழைநீர் அவற்றிலிருந்து கடலுக்குள் செல்வதற்கும் கலப்பதற்கும் தடைகளை ஏற்படுத்துவதும் போன்ற பொறுப்பான வேலைகளை செய்யும் பணியில் ஈடுபடுவதாகும்.

வடமாகாண விவசாயத் திணைக்களம் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் மண்வளம் கெடாமல் சேதனப்பசளைகளை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் மிதமிஞ்சிய தெளிப்பான்கள் பாவிப்பதை கட்டுப்படுத்தவும் பயிருக்கான நீர்ப்பாசனம் நிலக்கடிநீரை சென்று கலந்து மாசுபடுத்தாத வித்தில் பாசனம் மேற்கொள்வதை உத்தரவாதப் படுத்தவும் தங்களது பங்களிப்பை செலுத்தும்.

சுகாதாரத் திணைக்களம் காலத்திற்குக் காலம் கிணற்று நீரின் தன்மையை பரிசோதனை செய்தல் வீடுகளுக்குரிய கிணறுகள் அவற்றிற்கு அண்மையிலுள்ள மலசலகூடம் அங்குள்ள மண்தன்மை அதற்கேற்ப விடப்பட்டுள்ள இடைவெளி தூரம் ஆகியவற்றை பரிசோதித்தல் மலக்கலப்படல் மாசடைதல் ஏற்படுகின்ற இடங்களை சீராக்கி சுத்தத்தை ஏற்படுத்துதல் விவசாயச் செய்கையால் நீரின் தன்மையில்  பாதிப்பு இருந்தால் விவசாயிகளின் கவனத்திற்கு விவசாய திணைக்களம் மூலமாக அவற்றை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமநலச்சேவை திணைக்களம் சிறு குட்டை குளங்கள் அவற்றைத் தொடுக்கும் சிற்றாறுகள் போன்றவற்றை மண் நிரப்பி மக்கள் அத்துமீறிக் குடியேறாமலும் பாதுகாத்து மழைக்கு முன்னர் சுத்தப்படுத்தி மழைநீரை அவற்றில் சேமிக்க உதவவேண்டும்.

உள்;ராட்சி சபைகள் வீடு கிணறு மலகூடம் ஆகிவற்றை அமைப்பதற்கு விண்ணப்பம் செய்யும்போதும் வரைபடத்தை பரிசீலிக்கும்போதும் அதை அனுமதிக்கும் போதும் தூரங்கள் மண் தன்மை தேவையான இடைவெளிகள் ஆகியவைகளை கவனித்தல் வேண்டும்.

குழாய்க் கிணறுகள் குடாநாடு முழுவதும் தோண்டப்படுகின்றன. இதற்கு அனுமதிப் பத்திரம் கொடுக்கும் அதிகாரம் எந்த நிர்வாகத்திடம் கொடுபட்டுள்ளது ? என்ன அடிப்படையில் குழாய் கிணறு அமைக்க அனுமதி அளிக்கப்படுகின்றது ? என்பதெல்லாம் பொது மக்களுக்கு தெரியாத புதிராவுள்ளது. குடிநீர் மாசுபடுதலுக்கு குழாய் கிணறுகள் அமைத்தல் ஒரு முக்கிய காரணமாகவுள்ளது என்பதுடன் பெரும் தீங்கினை இழைப்பதாகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன

ஆனால் நடைபெறுவது எதுவெனில் திணைக்களங்கள் தங்கள் தங்களின் திணைக்கள அதிகாரத்திற்குள் வருகின்ற வேலைப்பகுதித் தேவைகளை மட்டும் நோக்காக கொண்டு இயங்கி வந்ததினாலேயே ஏற்கெனவே இருந்த நிலக்கீழ் நீரின் உவர்த்தன்மையாதல் மாசுபடுதல் ஆகியவற்றின் நிலைமைகள் மோசமடையத் தொடங்கியது என்பதே உண்மையாகும்.

கச்சேரிகளில் இடம் பெறும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இவ்வாறான முக்கிய விடயங்கள் விரிவாகவும் தெளிவாகவும் கலந்துரையாடப்படுதலுக்குத் தேவையான நேர ஒதுக்கீடு பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. அக்கூட்டங்களில் எடுத்து உரையாடப்படும் பல விடயங்களில் இதையும் ஒரு விடயமாக விவாதிக்க எடுத்துக் கொள்ளாமல் இதற்கென தனியான ஒரு கூட்டம் சம்பந்தப்பட்ட திணைக்களங்களயும் நிருவனங்களையும் கூட்டி ஆராயவேண்டியதான செயற்பாடுகள்தான் சிறந்த பலனையளிக்கும்.

இந்தக் குடிநீர் மண்வளம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் முடிவெடுத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் விடுபட்டதால் ஏற்பட்ட சிக்கலே இன்று விஸ்வரூபமெடுத்து குடிநீர் பயனாளிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி பிரச்சிளையை பாரதூரமாக்கிவிட்டது. திணைக்களங்கள் சபைகள் நேரத்திற்கு ஏற்றவாறு தனித்தனித் தீர்மானங்களை எடுத்தலினால் (யுனாழஉ னுநஉளைழைளெ) எப்போதும் ஆபத்தான நிலைமைக்கே கொண்டுபோய்விட்டுவிடும்.

நீர் உவராவதையும் மாசுபடுதலையும் குறைப்பதற்கும் அல்லது இல்லாமற் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசாங்கத்தின் திணைக்களங்கள் சபைகள் தங்களது கடமைகளை நேர்த்தியாக செய்யாது கவனயீனமான செயற்பாட்டினாலேயே இன்று இந்தப் பாரதூரமான சூழ்நிலைக்கு யாழ்குடாநாடு தள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகமும் படிப்பித்தலோடு நின்றுவிடாமல் நீர்வளம் நில வளம் சம்பந்தமான படிப்பில் பிரச்சினைக்குரிய யாழ்குடாநாட்டில் ஆங்காங்கே ஆய்வுகளையும் பரீட்சாத்தங்களையும் சோதனைகளையும் மேற்கொண்டு ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் செய்து முடிவுகளை அந்தந்த அரச திணக்களப் பகுதியினருக்கு தங்களது சிபாரிசுளுடன் அறிவிப்பதோடு அச்சிபாரிசுகளை அறிக்கைகள் மூலமும் பத்திரிகைகள் மூலமும் பொதுமக்களுக்கும் அறியக்கொடுப்பது சிறப்பானதாக இருக்கும். இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் தேவையான பல விடயங்களிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிவுகளை புத்தகங்கள் மூலமாக வெளியிட்டு வருகின்றன. இதனால் மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கவும் செயல்படுத்தவும் அரச திணைக்களங்களுக்கும் உள்;ராட்சி சபைகளுக்கும் பல்கலைக்கழகத்தின் சிபாரிசு அறிக்கை ஒரு அடிப்படை மூலமாக அமையக்கூடியதாக இருக்கும்.