மக்கள் போராட்டம்

கேப்பாப்பிலவு காணிகள் அக்கிராம மக்களின் வாழ்வாதார உரிமை

தற்சமயம் கேப்பாபுலவு என வழக்கத்தில் வந்துள்ள கேப்பாப்பிலவு என்ற இடம் ஒரு பழைமை வாய்ந்த கிராமமாகும். மூன்று தலைமுறைக்கு மேலாக தமிழ் மக்கள் குடியிருந்து வாழ்ந்த நிலம் இதுவாகும். இந்தப் பழைய கிராமத்தில் 131 குடும்பங்கள் குடியிருந்து வாழ்ந்து வந்திருந்தார்கள். இது கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவுக்குள் வரும் கிராமம். அண்டைய கிராமங்களையும் சேர்த்துள்ள கிராம சேவையாளரின் பிரிவின் பெயரே ‘கேப்பாப்பிலவு’ (MU/ 102) என்றிருப்பதால் இக்கிராமம் எவ்வளவு பழைமை வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்தறியலாம்.

2009ம் ஆண்டைய தேர்தல் வாக்காளர் இடாப்பிலுள்ள விபரப்படி :

தேர்தல் மாவட்ட இல. 11 – வன்னி வா. பி. இ. முல்லைத்தீவு வா. மா. இல. 43 கி.அ.பி. MU/102 கேப்பாப்பிலவு – கேப்பாப்பிலவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 131 குடும்பங்களில் 111 குடும்பங்கள் 2009ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளார்கள். வாக்காளர் அட்டை இல. 776 தொடக்கம் 1077 வரையிலான பெயர்கள் கேப்பாப்பிலவில் பதியப்பட்டுள்ளது. அதாவது 301 வாக்காளர்கள் பதியப்பட்டு இருக்கின்றார்கள்.

இவர்களிடம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணி அளிப்புகள் ( Govt. Grants  ) L.D.O.  உத்தரவுப் பத்திரங்கள்  C.L.O.  உத்தரவுப் பத்திரங்கள் ஆகியவையும் ஒரு சிலரிடம் தனிப்பட்ட காணி உறுதிகளும் இருப்பதாக தகவல் அறியப்படுகின்றது. 14 குடும்பங்கள் கல்வீடு கட்டி வசித்து வந்திருந்தார்கள். விவசாயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட கிணறுகள் பல இருந்தாலும் அதில் மூன்று கிணறுகள் பாரிய சுற்றளவைக் கொண்டவையாக இருக்கின்றன. பலரின் வளவுகளில் முக்கிய பயிராக காணப்படுவது தென்னை மரங்களாகும். இவை சாதாரணமாக 25 அடியிலிருந்து 35 அடி உயரம் கொண்ட சிறப்பாக தென்னங்குலைகள் காய்த்திருந்த மரங்களாக காணப்பட்டன. ஆகையால் இவை நம்பிக்கையாக இவர்களின் மூதாதையினரால் நாட்டப்பட்டவை என முழுமையாக ஏற்கக்கூடியதாக இருக்கின்றன. தென்னை மரங்களை விட மாமரங்கள் பலா மரங்களும் அவர்கள் வசித்த காணிகளில் விருட்சங்களாக வளர்ந்து இருந்தன. தாங்கள் வியர்வை சிந்தி உழுது பசளையிட்டு நீர் பாச்சி வளர்த்த மரங்களிலிருந்து கிடைக்கும் பலன்களை தற்போது படையினர் அனுபவிப்பதை எண்ணும்போது பராமரித்தவர்களுக்கு ஆதங்கம் எழுவது தவிர்க்க முடியாதவையாகும்.

மேற்கண்ட விபரங்கள் இந்தக் கட்டுரையாளரால் நேராக கண்கூடாக கண்ட காட்சிகளாகும். கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக அவற்றை பற்றி ஆய்வு செய்து பல தரப்பட்ட அதிகாரிகள் படையதிகாரியினரை சந்தித்து கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கௌரவ வட மாகாண முதலமைச்சர் ஜவரடங்கிய ஒரு குழுவை சென்ற வருடம் பங்குனி மாதம் நியமித்திருந்தார். அதில் இந்தக் கட்டுரையாளரும் ஒருவராக குழுவின் செயலாளராக பங்குபற்றி இருந்தார். அங்கிருந்த தலைமைப் படையதிகாரியைச் சந்திக்க அன்னாரின் அலுவலகம் அமைந்திருந்த கேப்பாப்பிலவு பழைய கிராமத்திற்கே செல்ல வேண்டியிருந்தது. செல்லும் போதே அக்கிராமத்திலிருந்த உயர்ந்த பயிர்மரங்களை கட்டுரையாளரால் அவதானிக்க முடிந்தது.

2008ம் ஆண்டு புரட்டாதி மாதம் படையினர் தெற்குப்பக்கத்திலிருந்து கேப்பாப்பிலவை நோக்கி நகர்ந்து வரும் தருணம் அதை கண்ணுற்ற கேப்பாப்பிலவு மக்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கிராமத்தை விட்டு வெளியேறினார்கள். அன்று வெளியேறியவர்கள் இற்றைவரைக்கும் அவர்களின் வாழ்வாதார பூமிக்கு திரும்ப முடியாது வேதனையுடன் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

இந்தக் காணி உரிமைக்கான சத்தியப் போராட்டத்திற்கு எங்கிருந்தாலும் மக்கள் தங்களது முழு மனதான ஆதரவுதனை தெரிப்பது மட்டுமன்றி முடியுமானவர்கள் அயல் மாவட்டங்களிலுள்ளவர்கள் அணியணியாக திரண்டு போராட்டதில் கலந்து கொள்ளுமாறு ‘மனிதம்’  மனித நேயத்துடன் வேண்டிக்கொள்கின்றது.

( ஆ…….ர் )