அரசியலில் . . . . எமது பார்வை

வட – கிழக்கு மக்களிடையே

புத்திஜீவிகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

அரசியல் காரணங்களுக்காக ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியும் அதன் முடிவும் தமிழர் சமுதாயத்தில் ஒரு பாரிய பரம்பரை இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. மூத்தவர் சொல்லுக்கு கீழ்ப்பணிதல் கற்றவர்களை மதித்தல் அறிஞர்களைப் போற்றுதல் பெற்றோருக்கு அடங்கி நடத்தல் ஆசிரியர்களை வணங்குதல் அதிகாரிகளை அனுசரித்தல் அயலவர்களுக்கு அன்பு காட்டல் ஆகியவை தமிழர்களின் மனிதப் பண்புகளாக ஏற்கப்பட்டு காலங்காலமாக நடைமுறையில் வந்துள்ளது.

இளைஞர்களின் எழுச்சியால் இந்தச் சங்கிலித் தொடராக புதிய பரம்பரைக்கு பாரப்படுதப்பட்ட பண்புகள் மாண்புகள் வழிவந்த அமைப்பு நிலைத்திருக்க முடியாதவாறு தொடர்புகள் அறுக்கப்பட்டுவிட்டது. அன்பு பண்பு பாசம் பிறரை மதித்தல் போற்றுதல் உதவுதல் அரவணைத்தல் அணைத்தும் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன. சுயநல வாழ்க்கையில் ஆணவம் பொறாமை வழிநடத்த பணத்தை மட்டும் மையமாக வைத்தே தற்போது வெளிப்பகட்டான வாழ்க்கை வட்டம் சுழலுகின்றது.

மக்கள் அரசியல் ரீதியாக இனவாதிகளாகவும் வாழ்கையில் சந்தர்ப்பவாதிகளாகவும் உறவுகளிடையே ஏமாற்றுபவர்களாகவும் மாறிக் கொண்டார்கள்.

பல ஞானிகளையும் ஆன்மீகவாதிகளையும் அறிஞர்களையும் அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் ஈன்றெடுத்த பெருமை கொண்ட தமிழர் சமுதாயம் இன்று ஏமாற்றுபவர்களைக் கொண்ட வாள்வீச்சு கலாச்சாரத்தை பின்னிக் கொண்டது.

அரசியலானாலும் சரி ஆன்மீகமானாலும் சரி அபிவிருத்தியானாலும் சரி மனித உரிமைகளைச் செயற்படுத்தவும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் புத்திஜீவிகளின் பங்களிப்பு ஒன்றே உண்மையான பலனைக் கொடுக்கும். அதன் மூலமாகவே நல்ல சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

கற்றவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். பொதுநலமாக அணுக ஆரம்பிக்க வைக்க வேண்டும். அவர்களை ஒன்றுகூட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். உலக சிந்தனையாளர்களின் ஆக்கங்களை பகிரவேண்டும். அவை பற்றி கருத்து பரிமாற்றம் செய்ய ( study circle ) இடமொதுக்கப்பட வேண்டும். இப்பணி சிறிதாக கிராமங்கள் தோரும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

சிவில் அமைப்பு அல்லது மனித உரிமைக்கான அமைப்பு என்றோ பெயரிடப்பட்ட கழகங்களை உருவாக்க மக்கள் முன்வரவேண்டும். அதில் எந்த அரசியல் கலப்பும் கட்சி ஊடுறுவலும் ஏற்பட இடமளிக்கப்படவாகாது.

குறிப்பு : இவ்விடயதானம் பற்றி கற்றவர்களின் சிறப்புக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. manithamlk@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்