நல்லூர் சூட்டுச் சம்பவம்

சட்டம் ஒழுங்குநிலைகுலைந்துள்ளது

யாழ்குடாவில் மதுபோதை பாவனைக்கும் வன்முறைச் செயற்பாட்டிற்கும் எதிராக பொதுமக்கள் திரண்டெழவேண்டியகாலம் உருவாகியுள்ளது. குடிகாரர்களையும் சண்டியர்களையும் பொதுமக்கள் ஒன்று கூடிஅடித்துதாக்குதல் நடத்தவேண்டும். அதுவும் வன்முறைகலாச்சாரமென எவரும் கருதினால் அவ்வாறான நிலமைகள்எதுவும் நடைபெறுவதை அவதானிக்கும்போது அந்த இடத்தில் மக்கள் திரண்டு கூடி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும்.

மக்கள் தாமுண்டு தம்வேலையுண்டு எனும் சுயநலச்சிந்தனையிலிருந்து விடுபட்டு அமைதியான வாழ்வுக்கு உறுதுணையாக செயற்பட மனதாரமாறவேண்டும். அநியாயம் நடக்கும் போதெல்லாம் தட்டிக் கேட்க முன்வரவேண்டும். போதையில் இருந்தாலென்ன ஆயுதம் வைத்திருந்தாலென்ன பொதுமக்கள் ஒன்றுகூடும் தன்மையை ஏற்படுத்த வேண்டும். நேர்மைமிக்க இளையதலைமுறை இதில் தனிஆர்வம் காட்டவேண்டும். அது அரசாங்க அதிகாரியாக இருந்தாலென்ன அரசியல்வாதியாக இருந்தாலென்ன அடித்தளமட்டத்திலுள்ள ஒருவனாக இருந்தாலென்ன போதையில் அல்லது வன்முறையில் எவர் செயற்படமுனைந்தாலும் நடமாடும் போலீசாருக்கு அறிவித்து அவர்களை கைது செய்ய உதவியாயிருத்தல் வேண்டும். அத்துடன் போலீசார் வரும்வரையில் அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறாது சமயோசிதமாய் நடத்தல் வேண்டும். கண்டவற்றைச் சாட்சியமாககூறத் தயங்கக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் அடாவடித்தனம் எல்லைமீறிக் கொண்டது. ஆட்டைக் கடித்துமாட்டைக் கடித்து இப்போ நீதி நிருவாகத்திற்கே சவால் விடுமளவுக்கு பயமற்ற தன்மை வளர்ந்துவிட்டது. இது போலீசார் கூறும் விதத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு குறிவையாது தற்செயலான சம்பவமாக நடந்திருந்தாலும் கூட மேல் நீதிமன்ற நீதிபதியின் கார் வந்திருந்ததை சுட்டவர் அறிந்திருந்தார் என்பதும் அவருடைய மெய்காப்பாளரின் துவக்கை பறித்து அவர் தாக்குதல் மேற்கொண்டதும் நீதிநிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எதிராக தெரிந்து செயற்பட்ட ஒரு செயலாகவே காணப்படுகின்றது. சுட்டவரை ஞாபகமற்ற தலைக்கேறிய குடிகாரனான ஏற்கமுடியாது. இனிமீண்டும் இங்கு ஆயுதக் கலாச்சாரம் தலைதூக்கமக்கள் இடமளிக்கக் கூடாது. வன்முறையால் ஏற்பட்டஅழிவுகள் உயிரிழப்புக்கள் துயரங்கள் பட்டதெல்லாம் போதும்.

யாழ்குடாவில் தேவையற்று குவித்துவைத்திருக்கும் ஆயிரக்கணக்கான படையினர் இருந்தும்கூட தேவையான கனிசமான அளவு போலீசாரைக் கொண்டிருந்தும்கூட எவ்வாறு இவ்வளவு இலேசாக அசட்டுத்தனமாக இப்பெரிய காரியத்தைச்சாதித்திருக்கிறார்கள் என்பது எங்கேயோ இடிப்பதுபோலத் தோன்றுகிறது.பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் கைங்கரியத்தில் போலீசார் இனவாத அரசியல்செயற்பாட்டாளர்களினால் பயன்படுத்தப் படுகின்றார்களா? வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மறைமுக ஆதரவு கிடைக்கின்றதா? போலீசாரின் பேச்சும் போக்கும் இவ்வாறு சிந்திக்கவைக்கின்றது.

(ஆ…ர்)