நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகவுள்ள அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள்

கனக நமநாதன்      LL.B. (Col. Uni.)

அதிகார அத்துமீறல்கள் அல்லது அதிகரர துஸ்பிரயோகங்கள் என்பது அமைச்சர்கள் மட்டத்திலிருந்து அரச சேவை அதிகாரிகள் வரை பின்பற்றப்படும் ஒரு செயலாக உருவெடுத்து வந்துள்ளது.
நாட்டின் அரசாங்கத்தை செயற்படுத்திக் கொண்டிருக்கும் நிருவாக அதிகாரிகள் தங்களது நிருவாகத்தில் அதிகார துஸ்பிரயோகங்கள் ( Abuse of power ) அதிகாரத்தை மீறிச் செயல்படல் (Excess of power ) ஆகிய சட்டத்திற்கு முரணான நிருவாகக் கடமைகளில் ஈடுபடுவதென்பது காலங்காலமாக தொடர்ச்சியாகவே நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கின்ற செயற்பாடுகளாகும். அமைச்சின் உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் மாகாண மட்ட உயர் அதிகாரிகள் இவ்வாறான சட்டமீறல்களில் எவ்வித தயக்கமுமின்றி ஈடுபட்டு வந்துள்ளார்கள் தற்போதும் அவ்வாறே ஈடுபட்டு வருகின்றார்கள்.

தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சட்டத்தின் எல்லைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என எண்ணாது ‘ தாங்கள் சட்டத்தினால் காப்பாற்றப்படுவார்கள்’ என்ற எண்ணமே மேலோங்க செயற்படுகின்றார்கள். இச் செயற்பாடு நேர்மை நியாயமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கும் இலஞ்சம் ஊழல்களை ஊக்குவிக்கவும் காலாக அமைகின்றது.

இதுமக்களைச் சீண்டச் செய்வதால் பாதிக்கப்படுபவர்கள் கொதித்தெழுந்து பல்வேறு விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்த விளைகின்றார்கள். ஆர்ப்பாட்டம் பகிஸ்கரிப்பு மறியல் போராட்டம் என நாட்டின் அமைதியை சீர்குலைக்கின்றது.

இவ்வாறான சட்டமுரணான அதிகார அத்துமீறல்கள் 2010 – 2015 ஆண்டுக் காலப்பகுதியிலே மிகவும் மோசமாக இடம்பெற்று வந்திருந்தன என்பது தற்போது இலஞ்ச ஊழல் விசாரணக் குழு மூலம் கிடைக்கும் செய்திகள் மற்றும் நிதி குற்றவியல் விசாரணை தினைக்களம் (F.C.I.D.) நடத்தும் விசாரணைகளிலிருந்தும் தெளிவாக அறியமுடிகின்றது.
அதிலும் கடந்த ஆட்சியில் அரசியல் அமைப்பின் 18வது. திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னரான காலகட்டத்தில் சட்ட மீறல்கள் அரச நிருவாகத்தையும் நீதி நிருவாகத்தையும் முற்றாக நிலை குலையச் செய்தது. இதன் பிரதிபலிப்பாக அதிகார துஸ்பிரயோகங்களும் அதிகார அத்துமீறல்களும் இலஞ்சம் ஊழல்களும் இலங்கை பூராகவும் எங்கும் எவற்றிலும் வியாபித்திருந்தது. இதன் விiளைவு அன்று அவ்வாறு சட்டமுரணாக செயற்பட்ட நிர்வாக அதிகாரிகளிற் பலர் இன்று நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ளார்கள்.

“கடவுள் கருணை காட்டினாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்”; என்றொரு பழமொழியுண்டு. அதேபோன்று அரசியல் தலைவர்கள் சில விடயத்தை ஏற்று அதை நடைமுறைப்படுத்த கட்டளையிட்டாலும் கூட அமைச்சு அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தி அதை செயற்படுத்தாமல் இருப்பதற்கு ஏதாவது காரணமும் காட்டிவிடுவார்கள். இலஞ்சம் ஊழல்களில் சம்பந்தம் மட்டுமன்றி இனவாதம் மதவாதத்திலும் அவர்கள் தங்கள் சொந்த நிலைப்பாட்டிலிருந்து மாறாதிருக்கின்றார்கள்.
தற்போதைய சனாதிபதி பிரதமர் ஆகியோர் அரச நிர்வாகிகளின் செயற்பாடு குறித்து நேரடியாகவே பல இடங்களில் சுட்டிக் காட்டிப் பேசும் அளவுக்கு அவர்களின் செயல் வினைத்திரன் தரம் குறைந்துவிட்டது. 1994ம் ஆண்டு சந்திரிகா சனாதிபதி பதவியேற்ற கையோடு இந்த அரச சேவை நிருவாக இயந்திரத்தை துடைத்து துப்பரவு செய்து பழுது பார்க்க எடுத்த முயற்சிகளெல்லாம் வீணிற்கு இறைத்த நீராகிவிட்டிருந்தன.

பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்திலிருந்து வந்த இலங்கை சிவில் சேவை (C.C.S.) 1962ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை குறிப்பு ( C.A.S. minute ) மூலம் மாற்றி அமைக்கப்பட்டு இலங்கை நிர்வாக சேவை (C.A.S. ) என பெயர் மாற்றம் பெற்றது. பெயர் மாற்றத்தோடு சிவில் அதிகாரிகளின் தரத்திற்கு குறைந்த நிலையிலிருந்த பல தரப்பட்ட அதிகாரிகள் இலங்கை நிருவாக சேவையில் இணைக்கப்பட்டார்கள். உதாரணமாக தற்போதுள்ள பிரதேச செயலாளர் ( D.S. ) என்ற பதவி முன்னர் உதவி அரசாங்க அதிபர் (A.G.A. ) என்றும் அதற்கு முன்னர் பிரதேச இறைவரி உத்தியோகஸ்தர் ( D.R.O. ) என்ற பதவிப் பெயரிலும் வழமையிலிருந்தது. இவர்கள் நிருவாக சேவையில் சேர்க்கப்பட்டது 1962ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை குறிப்பு ( C.A.S. minute ) ஆக்கப்பட்டதின் காரணமேயாகும். இது போன்று பல திணைக்களங்களில் இருந்த நிருவாக உத்தியோகஸ்தர்கள் எல்N;லாரும் இலங்கை நிருவாக சேவையில் உள்வாங்கப்பட்டார்கள். பின் இலங்கை குடியரசாக 1972ம் ஆண்டு ஆக்கப்பட்ட பின்னர் இலங்கை நிருவாக சேவை என்ற பெயர் சிறிலங்கா நிருவாக சேவை ( S.L.A.S.) என மாற்றப்பட்டது. இந்த நிலைமைகளுக்குப் பின்னரே அதில் பணியாற்றும் நிருவாக அதிகாரிகளின் சேவையின் தரம் குறைவடைந்து மாற்றம் பெற்றது.
மேலும் அரச திணைக்களங்களில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் அதிகரித்ததும் நிர்வாக சேவை அதிகாரிகளின் உதவி அரசியல் செய்யும் தரப்பினருக்கும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் கூட தேவைப்பட்டதால் நிருவாக சேவை அதிகாரிகளுக்கு மவுசு ஏற்படலாயிற்று. சிவில் அரசசேவை பணிக்கு என ( C.C.S) இருந்துவந்த உண்மையான பண்புகள் அடையாளங்கள் காணாமற் போய்விட்டன. அதற்கு இருந்த நேர்மைத்தன்மை பக்கச்சார்பற்ற நிலைப்பாடு இலஞ்சம் ஊழல்களில் மறந்தும் மதிமயங்காத பெரும் தன்மை ஆகியவை தற்போது அடியோடு அழிந்து விட்டது.