மாலை முழுதும் விளையாட்டு

ஓடி விளையாடு பாப்பா ஓய்திருக்கலாகாது பாப்பா எனப் பாட்டெழுதிய பாரதியார் தற்போதைய மாணவப் பிள்ளைகளின் நிiமையைப் பார்த்தார் என்றால் நெஞ்சு படபடக்குதே இந்த நிலை கெட்ட பெற்றோர்களை நினைக்கும்போதே எனவும் புதிதாக ஒரு பல்லவியை ஆக்கியிருப்பார்.

ஏட்டுக்கல்வியா உடற்பயிற்சியா மாணவ சமுதாயத்தின் தேவைப்பாடு என்று விவாதிக்கும் போது இரண்டும்முக்கியத்துவம் பெறுகின்றனவே ஒழிய இரண்டில் எதுவொன்றும் முன்னிலை பெறாது. அறிவு வளர்ச்சி மட்டும் நல்ல மனிதர்களை உருவாக்காது. திடமான ஆரோக்கியமும் உடல் நலமும் மகிழ்ச்சியான மனித வாழ்கைக்கு மிகவும் தேவையாகவுள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு சத்தான உணவும் வலுவான உடற்பயிற்சியும் அத்தியாவசிம் என்பது உலகறிந்தஉண்மை.இளைஞர் யுவதிகள் அந்தந்த வயதினராக இருக்கும்பொழுது வியர்வை சிந்தக் கூடியதான விiயாட்டுக்களில் ஈடுபடல் உடலுக்கு வலுவையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும். உடலில் இரத்தஓட்டத்தை சீராக்கும். தேவையற்ற கொழுப்புக்களையும் கழிவுகளையும் வெளியகற்றும். பசியைத் தூண்டும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சிந்தனைத் திறனை வளர்த்து மூளையை சுறுசுறுப்பாக்கும். கல்வி கற்றலுக்கு ஏற்ற மனப்பக்குவத்தையும் ஆர்வத்தையும் கொடுக்கும். மனதினில் தேவையற்ற கீழ்தரமாக அலைமோதுகின்ற சிந்தனைகள் எவையும் வராதுஅழித்தொழிந்துவிடும்.

1950ம்-60ம்-70ம் ஆண்டுகளில் பிற்பகல் 4.30 அல்லது 5.00 மணியாகிவிட்டால் எங்கெங்கெல்லாம் பயிர் விளைவிக்கப்படாத தரிசு மேட்டு நிலங்கள் இருக்கின்றனவோ அங்கங்கெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கூடிக் குதூகளித்து கொண்டிருக்கும். அந்தந்த காலத்திற்கு ஏற்றாப்போல் பிரபல்யத்துக்குரிய மட்டைப் பந்தடியோ கால்பந்தாட்டமோ வொளிபோல் பந்தாட்டமோ அவற்றுக்கெல்லாம் ஏற்ற உபகரணங்கள் இல்லையெனில் றவுண்டேஸ் கிளித்தட்டு வாரோட்டம் என்று ஒரே கூக்குரலிட்டு தங்களை மறந்த நிலையில் விளையாட்டுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவார்கள்.

யுவதிகள் தங்களின் வீட்டு வளவிலேயே அயல் வீட்டுப் பெண் பிள்ளைகளையும் கூட்டி கெந்திப் பிடித்தல் அப்போ டவுண் ( up or down ) போன்ற வேறும் விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள்.

ஆறு மணி அல்லது ஆறரை மணிக்கெல்லாம் இளைஞர்கள் யுவதிகள் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று முகம் கால் உடல் கழுவிச் சுத்தம் செய்து கடவுளைத் தியானித்து பாடங்களைப் படிக்க முற்படுவது பெற்றோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வுளாகும்.

இந்த நிலைமைகளையும் வசதிகளையும் தற்போது கிராமப் புறங்களைத் தவிர நகரப்பகுதிகளில் ஏற்படுத்த முடியாது. நகரங்களில் தரிசாக இருக்கும் வெற்றுக் காணிகளை காண முடியாது. வீட்டுக் காணியும் வளவுகளும் விஸ்தீரணத்தில் குறுகிவிட்டது. விளையாடுவதற் கேற்ற திடல்கள் இல்லாதுவிட்டது. அதனால் கிராமத்துக்கு இரண்டோ ஒன்றோ விளையாட்டுத் திடல்களை அமைக்க அரசாங்கம் தேவையான காணியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவற்றை உள்ளூராட்சி சபைகள் பராமரித்து வரவேண்டும்.

டெனிஸ் பற்மின்ரன் டேபில் டெனிஸ் போன்ற விளையாட்டு அரங்கங்கள் இருப்பினும் அவை ஒரு சிலரின்தே வையை மட்டும் பூர்த்தியாக்கும். சிலர் ஜிம் தேகப்பயிற்சி கூடத்திற்கு செல்கின்றார்கள். அதற்கு பணச்செலவு அதிகம். இது பெற்றோர்கள் எல்லோருக்கும் கட்டுப்படியாகாது.இந்தக் கட்டுரையில் முக்கியமாக குறிப்பிட முனைவது மாணவப் பருவத்தில் விளையாடுவதற்கான நேர ஒதுக்கீடு செய்தல் பற்றியதே. உங்களதுபிள்ளைகளை திடகாத்திரமுள்ள ஆண்மகனாகவும் சர்வலட்சனம் பொருந்திய பெண் மகளாகவும் திருணக் கோலத்தில் பார்க்க விரும்புகின்றீர்களா? அல்லது வண்டியும் தொந்தியுமான உடலைக் கொண்டவராக அல்லது தேனீரில் சீனி போடாது
குடிப்பவராக அல்லது இரத்த அழுத்தத்திற்கு கொலஸ்றோலுக்கு அல்சருக்கு நரம்புத் தளர்ச்சிக்கு குளிசை பாவிப்பவராக வருங்கால ஆண் பெண்களை உருவாக்க விரும்புகின்றீகளா?. ஆகையால் மாலை 5.30 மணிக்குப்பின்னர் பிரத்தியேக வகுப்புகள் முதற்கொண்டு சகல படிப்பித்தல் வேலைகளும் தடை செய்யப்பட வேண்டியது இக்காலகட்டத்தின் முக்கிய கரிசணையாகும்.

பணத்தை உழைப்பவராக்க படிப்பினால் உயர்த்தலாம் ஆனால் அவர்கள் திருண வாழ்க்கையை தொலைத்து நிம்மதியற்வராக வாழுவதை விரும்புவீர்களா?

மதுரகவி பாரதியார் சொன்னபடி மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தாவிட்டாலும் மாலை வேளையில் குறைந்தளவு ஒரு மணி நேரத்தையாவது விளையாட்டு என ஒதுக்கி வழக்கப்படுத்துதல் வேண்டும். அவ்வேளைகளில் மாணவர்கள் பாடசாலைகளில் என்றாலும் சரி கிராமத்து விளையாட்டுத் திடலிலென்றாலும் சரி அல்லது வீட்டு முற்றத்தில் என்றாலும் சரி விளையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

( ஆ………ர் )