ஆலயம் செல்வது சாலவும் நன்று

சைவ மக்கள் வெள்ளி செவ்வாய் தினங்களிலும் இஸ்லாமிய மக்கள் வெள்ளிக் கிழமைகளிலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும் பௌத்த மக்கள் போயா தினங்களாகிய பூரணையின் ஆரம்ப நாட்களிலும் கோவிலுக்கு சென்று வழிபடும் நாட்களாக நடைமுறையில் காணக்கூடியதாகவுள்ளது. கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு வீடு திரும்பும்போது மனதில் ஒரு நிம்மதி திருப்தி அமைதி ஏற்படுவதை உணரக்கூடியதாக இருக்கும். ஆசாரங்களை பேணிக்கொண்டு கோவிலுக்கு செல்லுதல் முக்கியமானது. குளித்து உடலைச் சுத்தம் செய்யாது ஏதேச்சாரமாக நினைத்தவுடன் கோவிலுக்கு செல்வது என்பது எதிர்பார்க்கும் பலனை அளிக்காது. மனதில் தூய்மை எந்த அளவுக்கு இருத்தல் வேண்டுமோ அதே போன்று உடலிலும் சுத்தம் தேவையாகின்றது. மனச்சுத்தம் உடற்சுத்தம் இரண்டும் ஆன்மீகத்தன்மையின் அடையாளங்கள்.

முதலில் குடற் சுத்தத்தை உருவாக்க வேண்டும். அதன்பின் உடற் சுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அடுத்தபடியாக சுத்தமான ஆடையை அணியவேண்டும். தோய்த்து கொண்ட ஆடையே போதும். ஸ்திரிக்கை போட்டு மடித்திருக்க வேண்டுமென்ற தேவையில்லை. சைவ சமயத்திலுள்ள ஆண்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவதற்காக இரண்டு அல்லது குறைந்தது ஒரு வேட்டியையாவது தயாராக வைத்திருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் அவர்களின் சமய கோட்பாடுகளின்படி செல்லமுடியும். அதே போன்று இஸ்லாமியர்கள் பௌத்தர்கள் தங்கள் தங்கள் சமய கலாச்சார முறைப்படி உடை அணியலாம்.

சைவ மக்கள் மேற்கத்தைய பாணியிலான உடைகளை அணிவதிலிருந்து தங்களைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். ஆன்மீகம் என்பது பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டது. நாகரீக வெளி வேஷத்தின் வெளிப்பாடாக மாற்றிவிடக்கூடாது. துள்ளல் துடித்தல் ஆகாது. அமைதிப் பக்குவம் அடையக் கூடியதான ஆடை ஆபரணங்களையே அணிய வெண்டும்.

நல்ல சிந்தனைகளோடு கோவிலுக்கு போதல் வேண்டும். ஆண்டவனிடம் கேட்டு வேண்டுதலுக்கு உள்ளவற்றை மனதில் தியானித்து கொண்டு செல்லலாம். கால்கள் எவ்வளவுதான் சுத்தமாக இருந்தாலும் கோவில் கிணற்றிலோ அல்லது குழாயிலோ நீர் கொண்டு காவைச் சுத்தம் செய்து கோவிலுக்குள் செல்லல் வேண்டும்.

கட்டாயமாக உங்கள் பிள்ளைகளையும் சுத்தமாக்கி கோவிலுக்கு அழைத்து செல்லுங்கள். யுத்த கால நினைவுகளிலிருந்து பிள்ளைகளை மீட்டெடுங்கள்.
( ஆ……..ர் )